கடற்கரையில் மீன்கள் விற்கக்கூடாது. ஆனால் கடலுக்குள் பேனா வைக்கலாமா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் அனுமதியின்றி மீன் கடைகள் வைத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது லூப் சாலையில் அனுமதியின்றி செயல்படும் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதியின்றி லூப் கடற்கரை சாலையில் செயல்பட்ட கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
இதனால் மீனவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சாலையில் மீன்களை கொட்டியும் படகுகளை நிறுத்தியும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நொச்சிக்குப்பம் மீனவர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்ரல் 18) நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு ஆதரவளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியபோது,
“லூப் சாலையில் கடை வைத்திருப்பவர்கள் நிரந்தர கட்டிடம் கட்டி மீன் கடைகள் வைக்கவில்லை. சிறிய குடைக்கு கீழே தான் தற்காலிகமாக கடை வைத்துள்ளார்கள். இதனை காலி செய்ய வேண்டிய அவசியம் எதற்காக வந்தது.
நாங்கள் கடற்கரையில் மீன் விற்கக்கூடாது. ஆனால் நீங்கள் கடலுக்குள் பேனா வைக்கலாமா சமாதி வைக்கலாமா என்று கேள்வி கேட்டால் அதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா கடற்கரையில் மீன்கள் விற்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம் தான் சமாதி வைக்கலாம் என்று அனுமதி கொடுத்துள்ளது.
சமாதி கட்டுவதில் நீங்கள் காட்டிய வேகத்தை ஏன் மீன் சந்தை கட்டுவதில் வேகம் காட்டவில்லை.
வட இந்திய தொழிலாளர்கள் இங்கு பிழைப்பிற்காக வந்தபோது அவர்களுக்கு ஆதரவாக பேசியவர்கள் மீனவ மக்களுக்கு ஆதரவாக பேசுங்கள்.
தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.
நீதிபதிகள் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்பாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
செல்வம்