ஸ்ரீராம் சர்மா
திராவிடச் சித்தாந்தத்தின் ஞானக் கருவூலமொன்று கருப்புத் திரைக்குள் முகமொளித்துக் கொண்டதே !
காலமெல்லாம் முரசொலிக்காய் ஓயாது உழைத்த அந்தப் பேரன்புப் பெட்டகம் இன்று ஈமக் கப்பலுக்குள் ஏறிவிட்டதே !
முத்தமிழறிஞரின் முரசொலிக்கு மூன்றாம் கண்ணாய் நின்ற அந்தப் பேரறிவு, சில்லிட்டு இருப்பதாய் சேதி வந்ததே ! ஐயகோ, எளியவன் மூளை எழுத மறுத்து மருகி மருகி மருண்டு மருண்டு செத்துச் செத்துப் பிழைக்கிறதே !
எழுது, எழுது என்று என்னை ஊக்கப்படுத்திய, தாயுள்ளம் சுமந்த அந்தப் பேரன்புக் குரல் என் செவிப்பறைகளெங்கும் முரசொலித்து மோதி மோதி விழிகளை கடலாக்குகிறதே ! விரல்கள் நடுங்குகின்றதே ! வேறேதும் பிடிக்கலையே!
வரி வரியாய் படித்து அதிகாலையிலும் அழைத்து வாழ்த்தும் அந்தத் தாயுள்ளம், இன்று சொல்லாமல் கொள்ளாமல் சுவனம் புகுந்து விட்டதே !
முன்தினம் கூட முரசொலியில் எழுதினாரே ? ஏனிந்த அவசரமோ ? எங்கிருந்து அழைப்போ ? முத்தமிழறிஞரின் முகம் பார்க்கும் பரபரப்போ ?
சட்டம் படித்தவரே! சட்டமன்றக் கூண்டிலேற்றிய போதும் விரைத்து நின்ற திராவிடத் தீரரே ! எங்கள் மிக மூத்த வழிகாட்டியே ! பத்திரிக்கையுலகத்தின் வீட்டுமரே… பாசப் பெருந்தகையே… அமையும் ஐயா, அமையும்! அமையும்!
தங்களை, தங்கள் அயராத அர்ப்பணிப்பை ‘முரசொலி செல்வம்’ என்னுமந்த பெருமரியாதைக்குரிய திருப்பெயரை இந்த திராவிடத் திருநாடு என்றென்றும் மறவாதிருக்கும்! தோன்றி வந்த ஆரூர் சோதிக்குள் அமையும் ஐயா, அமையும்! அமையும் !
தமிழாய்ந்த பெருமகனே, எங்களைப் போன்ற இளைஞர்களின் எழுத்தில் என்றும் நீங்கள் முரசொலித்து வாழ்வீர்கள் என்பது திண்ணம். பாரம் உமக்கில்லை. பால்வீதி கடந்து அமையும் ஐயா, அமையும் ! அமையும் !
ஆன்மச் சிறகின் காலகாலமான மிதத்தலில், மரணம் என்பது அடுத்தகட்ட பயணம் மட்டுமே எனத் தேற்றிக் கொள்வதைத் தவிர எமக்கிங்கே வேறு வழியில்லை.
தாங்கள் எங்கள் மேல் பொழிந்த பேரன்பை இறுகப்பற்றியபடி நன்றியோடு இருகரம் கூப்பி நெஞ்சார வணங்குகிறோம் !
பேராளரே அமையும் !
தீதொன்று அணுகாத பேரமைதி அதற்குள், திராவிடத் திருவாய் சென்று அமையும் ஐயா… அமையும் ! அமையும் !!
*******
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அடக்குமுறையை துணிவுடன் எதிர்கொண்டவர்”: முரசொலி செல்வம் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!
முரசொலி செல்வம் மறைவு: திமுக கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட உத்தரவு!