பாஜகவின் மிகப்பெரிய ஊழலை திசை திருப்புவதற்காக பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். நேற்று கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி, திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 16) செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியிருக்கிறது. அதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு பிரதமர் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்.
தேர்தல் பத்திரம் என்பது கொள்ளையடிக்கக் கூடிய முயற்சி என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். தேர்தல் ஆணையமும், ஆர்.பி.ஐ-யும், தேர்தல் பத்திரம் வெளிப்படைத்தன்மையை இல்லாமல் ஆக்கிவிடும், தேர்தல் நடைமுறையை சீரழித்துவிடும், ஊழலை ஊக்குவிக்க வாய்ப்பு வந்துவிடும் என கூறியிருந்தன.
இதையெல்லாம் மீறி தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டு வந்து, கோடி கோடியாக பணக்காரர்களை மிரட்டி பிடுங்கியிருக்கிறார்கள். ஒப்பந்தங்களை சலுகையில் கொடுத்து பணம் வாங்கியிருக்கிறார்கள்.
நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த பல நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கியிருக்கிறார்கள். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களால் நூற்றுக்கணக்கான கோடிகளில் எப்படி பணம் வழங்க முடிந்தது.
வருமான வரியில் இருந்து அந்த நிறுவனங்களை பாதுகாப்பதற்காக நஷ்ட கணக்குகளை காட்ட வைத்தார்களா?. உண்மையிலேயே அந்த நிறுவனம் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது என்று சொன்னால் அவர்களுக்கு வங்கியில் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்து கொடுத்து, அதற்கு கையூட்டாக இந்த பணத்தை பெற்றார்களா என்ற கேள்விகள் எல்லாம் எழுகிறது.
சிறிது நாட்களுக்கு முன்பு சிஏஜி அறிக்கை வெளியானது. அதில் பல லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் இருந்து திசை திருப்புவதற்காக, சாதாரண மக்கள் எல்லாம் பாதிக்கப்படக் கூடிய பல்வேறு பிரச்சினைகளை செய்தார்கள்.
இப்போதும் அதையே செய்கிறார்கள். சீனா 4000 ஸ்கொயர் கிமீ ஆக்கிரமித்திருக்கிறது. இதை வாய்மூடி பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.
கச்சத்தீவை மீட்க பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? பிரதமர் மோடி சொல்வது உண்மையாக இருந்தால் 10 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பு மூலமாக கச்சத்தீவை மீட்டெடுக்க முயற்சி செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?.
2018ல் பாஜக ஆட்சியில் தான் முதல்முறையாக, இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றிய படகுகளை விலைக்கு விற்று அந்த பணத்தை தேசியமயமாக்கியது. அதை மோடி அரசு வாய்மூடி பார்த்துக்கொண்டிருந்தது.
மீனவர்களின் படகுகளை கூட வாங்கிக் கொடுக்க முடியாத பிரதமர், இன்று மீனவர்களை பாதுகாக்கிறோம் என்று சொல்கிறார்.
ஓகி புயலின் போது கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் அழுகுரலை கேட்டு பிரதமர் வரவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குமரி வந்தனர்.
அதன்பிறகு மோடி வந்தார். கன்னியாகுமரியில் பாதிப்பு இல்லை. கன்னியாகுமரி மேற்கு கடற்கரையில் தான் பாதிப்பு என கூறினார். ஹேலிப்பேடில் தரையிறங்கிவிட்டு ஒரு புகைப்பட கண்காட்சியை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டார்.
அவர் வந்திருந்த போது, கடலில் அடிக்கடி மீனவர்கள் காணாமல் போகிறார்கள். அதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் அதற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.
பாஜக ஆட்சியில் 50,000 கோடி தமிழ்நாட்டின் சாலைகளுக்காக கொடுத்திருப்பதாக மோடி சொல்கிறார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 50,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது.
இப்படி ஒரு நிலையில் தேர்தலுக்கான முழக்கங்களாக பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தல் … வேட்பு மனு தாக்கல் எப்போது?