தமிழக சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்டமுன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான ஒரு காலக்கெடுவை மத்திய அரசும் குடியரசு தலைவரும் நிர்ணயிப்பதற்கான மசோதாவை அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், “இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. துணைநிலை ஆளுநர்கள் என்னும் இடைமுகம் ஒரு போர்க்களமாக ஆக்கப்பட்டு மத்திய அரசால் சத்தமின்றி ஒரு போர் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, மத்திய அரசையும் குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தை நான் பாராட்டுகிறேன்.
அதே போன்று ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இதுபோன்றதொரு தீர்மானத்தை வரும் கூட்டத்தொடரில் டெல்லி சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
டெல்லி முதல்வரின் ஆதரவிற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எந்த ஒரு ஜனநாயகத்திலும் சட்டமன்றத்தின் இறையாண்மையே உச்சமானது.
ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் சட்டமன்ற அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று தெரிவித்து “தீ பரவட்டும்” என்ற ஹேஷ்டாக் பயன்படுத்தியுள்ளார்.
செல்வம்