“இந்தப் பஞ்ச் டயலாகுலாம் இங்க எடுபடாது” : விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

Published On:

| By Kavi

நீட் விவகாரம் குறித்த விஜய்யின் பதிவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீட் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு, “நீட் தேர்வை மாநில அரசால் ரத்து செய்ய முடியாது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். 

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று (ஜனவரி 11) தனது எக்ஸ் பக்கத்தில், எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே என்ற எம்ஜிஆர் பாடலை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். 

“எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” என்றும் விஜய் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் விஜய்யின் ட்வீட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அவர், “நீட்டுக்கு எதிரான எங்கள் கருத்தை முதல்வர் சட்டமன்றத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார். நீட்டை எதிர்த்து எங்கள் போராட்டம் தொடரும்.

விஜய், திரைப்படத்தின் வசனம் போல பேசிக் கொண்டிருக்கிறார்.  அவர் முதலில் மக்களிடத்தில் வரட்டும். மக்கள் கருத்தை புரிந்து கொள்ளட்டும். 

கிராமத்தில் மக்களோடு மக்களாக பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். ஆகவே மக்கள் பற்றி எங்களுக்கு தெரியும். 

திரைப்படங்களில் வசனம் எழுதிக் கொடுத்து பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் அரசியலில் எடுபடாது. 

நீட் என்று வந்தபோதே அதை கலைஞர் தடுத்து நிறுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும் நீட் தடுத்து நிறுத்தப்பட்டது. 

அதன் பிறகு வந்த எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியில் தான் நீட் வந்தது. 

அதை எதிர்த்து எங்கள் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தனது இன்னுயிரை நீத்தார். 

அதன் பிறகு தான் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நீட் தேர்வின் கொடூரம் குறித்து தெரிய ஆரம்பித்தது. 

எனவே நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கோடி கையொப்பங்களை பெற்று குடியரசு தலைவர் வரை சென்று கொடுத்திருக்கிறார். 

இது ஒன்றிய அரசை எதிர்த்து நடத்துகிற போராட்டம். ஒன்றிய அரசை பொறுத்தவரை, கிராமப்புறத்தில் இருக்கிற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படித்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 

நீட் தேர்வை நேரடியாக மாநில அரசால் நீக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். 

இந்த சட்டம், நாட்டு நடைமுறை, அரசு நடைமுறை புரிந்தால் தான் பேச முடியும். பஞ்ச் டயலாக் பேசக்கூடிய விவகாரம் இது கிடையாது” என்று விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

பவர்ஃபுல் பாஸ்போர்ட் முதல் இடத்தில் சிங்கப்பூர்: இந்தியாவுக்கு என்ன இடம்?

அண்ணாமலையாகிய நானும் சொல்கிறேன்… இந்தி குறித்த கேள்விக்கு பதில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share