அண்ணாமலையின் வார் ரூம் திமுகவை எதிர்ப்பதை விட்டுவிட்டு கட்சிக்குள் இருப்பவர்களை காலி செய்ய பயன்படுத்தப்படுகிறது என்று வலதுசாரி ஆதரவாளர் மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 3-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம், “அண்ணாமலை தலைமையின் கீழ் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அவர் ஒரு மோசமான நபர். எனக்கு எதிராக ட்ரெண்ட் செய்யும் வார் ரூமை நடத்தி வருகிறார்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அண்ணாமலையின் வார் ரூம் குறித்து மாரிதாஸ் நேற்று (ஜனவரி 4) தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”தமிழக பாஜகவில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களாக பெண்கள் பற்றிய சர்ச்சை ஓயவில்லை.
பாஜகவில் உள்ள 80 சதவிகிதம் பேர் சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்துவதால் தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுகிறது.
அண்ணாமலையின் வார் ரூம் திமுகவை எதிர்ப்பதை விட்டுவிட்டு கட்சிக்குள் இருப்பவர்களை காலி செய்ய பயன்படுத்தப்படுகிறது. காயத்ரி ரகுராம் மீது 1000 போலி ஐடிகளை உருவாக்கி அவதூறு பரப்புகிறார்கள்.
கட்சிக்கு உழைத்த பெண்ணை கருத்து வேறுபாடு காரணமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அருவருப்பாக எழுத ஆரம்பிக்கிறார்கள்.
அண்ணாமலை வார் ரூம் பயன்படுத்துவதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. நம்மை கேள்வி கேட்க யாரும் கிடையாது.
நான் சொல்கிறது தான் நியாயம். நான் சொல்கிறது தான் சட்டம் என்று இருந்தால் இந்த வார் ரூம் குழியை தோண்டும்.
பாஜகவில் தொடர்ந்து சர்சைகள் ஏற்படுவதால், கட்சிக்கு வெளியே உள்ள பாஜக ஆதரவாளர்கள் நிறைய பேர் இதனை அசிங்கமாக கருதுகிறார்கள்.
கே.டி.ராகவனை திட்டமிட்டே ஹனி ட்ராப்பில் சிக்க வைத்து கட்சியிலிருந்து காலி செய்திருக்கிறார்கள். யார் யாரை வெளியேற்ற வேண்டுமோ அவர்களை பெண்களை வைத்து தொடர்பு படுத்தி காலி செய்கிறார்கள்.
வார் ரூம் சம்பந்தப்பட்ட நபர்கள் என்னை மிரட்டியதாக தகவல்களை பரப்புகிறார்கள். அவர்கள் தங்களுடைய அரசியல் பிழைப்புக்காக பாஜகவை கெடுத்து குட்டிச் சுவராக்குகிறார்கள். ஓர் அளவிற்கு மேல் பொறுமையாக போக முடியாது.” என்று காட்டமாக பேசியுள்ளார்.
செல்வம்
ரூ.1,337.76 கோடி அபராதம் : கூகுள் கோரிக்கையை மறுத்த என்சிஎல்ஏடி
Comments are closed.