எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ் – ஷைனி தம்பதியினரின் 3 வயது ஆண் குழந்தையை காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய்த் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறிநாய்க் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும் ஒருகட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து குழந்தையின் உடலில் அசைவு இருப்பது தெரியவந்த நிலையில், உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர்கள் சேர்த்ததாகவும், அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வெறிநாய் கடிக்கான எந்த ஒரு தடயமும் இல்லை எனவும், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குண்டான சிகிச்சை அளித்த நிலையில் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி, தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் குழந்தையின் தாய் ஷைனி ஊடகங்களில் தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன.
சமீப காலமாக அரசு மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லும் சாமானியர்களின் கால் போகிறது; கை போகிறது; உயிரும் போகிறது என்ற அவலம் இந்த திமுக ஆட்சியில் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது.
சளிக்குச் சென்றாலும் நாய் கடி ஊசி. உண்மையிலேயே நாய் கடிக்கு சிகிச்சை கேட்டுச் சென்றால், நாய்கடி ஊசி இல்லை என்ற நிலை. தசைப் பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார்.
தவறான சிகிச்சையால் சிறு குழந்தையின் கை அகற்றப்பட்டு, தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை.
ஆனால், சுகாதாரத் துறை அமைச்சருக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த திமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர், மக்கள் நலன் காக்கும் அமைச்சரா? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் அமைச்சரா? என்பதே சந்தேகமாக உள்ளது.
தமிழகத்தின் தலையெழுத்து, முதலமைச்சரின் மகன் விளையாட்டுத் துறை அமைச்சர். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளையாட்டுப் பயிற்சியாளராக வலம் வருவதால், துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ உதவி போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள்.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்த் தன்மை குறித்து பரிசோதிக்காமல் கவனக் குறைவாக கையில் கிடைத்த மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவது மிகவும் கொடுமையானதாகும். இதுபோன்ற தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது விடியா திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனியாவது, சுகாதாரத் துறை அமைச்சர், அவரது துறையில் முழு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 15) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நான் உடற்பயிற்சி பயிற்சியாளராக வலம் வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.
நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 6 மணிக்கு உடற்பயிற்சியை முடிப்பேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் எல்லாம் 6 மணி வரை தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் 4 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
நான் இந்த இரண்டரை ஆண்டுகளில் எத்தனை இடங்களுக்கு, மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்திருக்கிறேன் என்ற பட்டியலை வைத்திருக்கிறேன்.
அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் நான் செய்த ஆய்வுகளில் பாதி அளவாவது செய்திருந்தால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதை எடப்பாடி பழனிசாமிக்கு சவாலாகவே விடுக்கிறேன். நீங்கள் 4 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தீர்கள், நீங்கள் செய்த பணிகளையும் கொண்டு வந்து காட்டுங்கள் என்று சவால் விடுகிறேன்.
இது துறை ரீதியான பதில் என்பதையும் கடந்து நான் சவால் விடுகிறேன். யார் வந்தாலும் அவர்களுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னாள் வரை பாம்புக் கடி மருந்துகளும், நாய் கடி மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் இருந்தது. இப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருக்கிறது.
நாய் கடிக்கு மருந்து இல்லை என்று சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி உங்களை எங்கேயாவது நாய் கடித்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து மருந்துகள் போட்டுக்கொள்ளலாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இதயம் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம். இதற்கு முன்னதாக மாரடைப்புக்கான அறிகுறி தென்பட்டால் நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைக்குத் தான் வர வேண்டும். குக்கிராமங்களில் வசதிகள் இல்லை. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் 14 மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை 10,999 மருத்துவமனைகளில் கையிருப்பு வைத்திருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமியும் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் மருந்துகள் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் தேவைப்பட்டால் நீங்களும் 14 மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று பதிலளித்துள்ளார் மா.சுப்பிரமணியன்.
பிரியா
புல்வெளி புல்வெளி தன்னில் மழைத்துளி மழைத்துளி… : அப்டேட் குமாரு
’பாஜகவின் இரட்டை வேடத்தை பேசியுள்ளார் மோடி’: எதிர்க்கட்சிகள் விமர்சனம்!