12 மணி நேர வேலை: திமுக தொழிற்சங்கம் தொமுச எதிர்ப்பு!

Published On:

| By Selvam

12 மணி நேர வேலை சட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தனியார் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

சென்னையில் நேற்று 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்க தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எம்எல்எஃப், எல்எல்எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மே 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கூட்டத்தில் அறிவித்தனர்.

ஆலோசனை கூட்டத்தை திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் புறக்கணித்தது.

இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா குறித்து 14 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில்,

தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்கம், அரசு ஊழியர் சங்கம், ஐஎன்டியூசி உள்ளிட்ட 14 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சண்முகம், நடராஜன் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு 12 மணி நேர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

செல்வம்

கேட்டுக்கொண்ட பாஜக – வாபஸ் பெற்ற அதிமுக!

ஒரு பாடலுக்கு ரூ.1 கோடி கேட்கும் ஸ்ரேயா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel