புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் 70 ஆவது பிறந்தநாள் விழா (ஏப்ரல் 3) உடுமலைப் பேட்டையில் நடந்தது.
இந்த விழாவில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் வாழ்த்திய முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “புதிய தமிழகம் கட்சி நிறுவனரான டாக்டர் மாணவ பருவத்தில் இருந்தே சமூகப் போராளியாக திகழ்பவர். என் தந்தை காலத்தில் இருந்தே அவர் என் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார். சங்கீதா மருத்துவமனையில்தான் என் மகன் பிறந்தார். டாக்டரின் மனைவியான டாக்டர் சந்திரிகா அம்மாதான் என் மகன் பிறந்த போது பிரசவம் பார்த்தவர்.
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வருகிறவர்கள். தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைப் போராட்டங்கள் நடத்தி வருபவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சியைத் தொடங்கி அரசியல், சமுதாயப் பணி ஆற்றி வருகிறார்” என்று பேசிய வேலுமணி அதன் பின் அரசியல் பொடி வைத்தார்.

“அரசியல் ரீதியாகவும் புதிய தமிழகம் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. புதியதமிழகம் பொன்விழா மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தபோது அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேர் பங்கேற்றனர். அதேபோல 13-10-2022 எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரதம் இருந்தபோது காவல்துறை மறுத்து கைது செய்தபோது முதன் முதலில் டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் வந்து எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தினார்.
கோவையில் திமுக அரசை கண்டித்து நாங்கள் 2-12-22 உண்ணாவிரதம் இருந்தபோது வந்து வாழ்த்தினார். தேவேந்திரர்களின் பிரச்சினை தீர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எடப்பாடி. ஏனெனில் அப்போது கூட இருந்தது நான் தான். அம்மா காலத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இருந்த டாக்டர், இப்போது எடப்பாடியார் தலைமையிலான கூட்டணியில் தொடர்கிறார். எடப்பாடியார் தலைமையில் கூட்டணி வெல்லும்” என்று பேசி அமர்ந்தார் எஸ்.பி.வேலுமணி.
இதே மேடையில் பாரதிய ஜனதாவின் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வாழ்த்திப் பேசுகையில், “பாரதிய ஜனதா கட்சியின் சிங்கமான அண்ணாமலை இந்த நிகழ்வுக்கு புறப்பட்டுவிட்ட நிலையில்…கர்நாடக தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பான பணிகள் இருப்பதால் என்னை இங்கே அனுப்பி வைத்தார். நானும் வேறு மாநிலத்தில் இருந்து நீண்ட பயணத்திற்கு பிறகு இங்கே வந்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அண்ணாமலையின் வாழ்த்து கடிதத்தை மேடையிலேயே வாசித்தார் ஏ.பி.முருகானந்தம்.

தொடர்ந்து பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியும் புதிய தமிழகம் கட்சியும் வேறு வேறல்ல. நாங்கள் என்ன நினைக்கின்றோமோ அதை டாக்டர் செய்துகொண்டிருக்கிறார். டாக்டர் என்ன நினைக்கிறாரோ அதை பிரதமர் நரேந்திர மோடி நடத்திக் கொண்டிருக்கிறார். ‘நீங்கள் தேவேந்திரர்கள் நான் நரேந்திரன் உங்களோடு இருக்கிறேன்’ என்று முழங்கியவர் பிரதமர் மோடி. இந்த மேடையில் ஒளிபரப்பிய காணொலியில் டாக்டர் அவர்களின் தாயார் பெயர் தாமரை அம்மாள் என்று அறிந்தேன். எவ்வளவு பொருத்தம். அதுவும் எட்டாவது மகனாக பிறந்ததால் கிருஷ்ணன் பெயரை வைத்திருக்கிறார்கள். இன்னும் மட்டற்ற மகிழ்ச்சி.
இதுமட்டுமல்ல பாஜகவினர் நாங்களும், புதிய தமிழகம் கட்சியினரும் வேட்டி எடுத்தால் ஒரே நிறத்தில்தான் வேட்டி எடுப்போம். எங்கள் நிறமும் நாங்களும் எப்போதும் ஒன்றுதான்” என்றார் ஏ.பி.முருகானந்தம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார். அதில் புதிய தமிழகமும் இடம்பெற வேண்டும் என்று சமீபத்தில் கிருஷ்ணசாமியின் வீட்டுக்கு சென்றபோது கூட அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அதேநேரம் அதிமுக தன் தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறது.
இந்த திட்டத்தோடுதான் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணியும், பாஜகவின் ஏ.பி.முருகானந்தமும் புதிய தமிழகத்துக்கும் தங்கள் கட்சிக்கும் இருக்கும் ஆழமான தொடர்பை குறிப்பிட்டிருக்கிறார்கள். எடப்பாடியின் குரலாக வேலுமணியும், அண்ணாமலையின் குரலாக ஏ.பி.முருகானந்தமும் புதிய தமிழகம் கட்சிக்கு நேரடியாகவே அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
டாக்டரின் ஆபரேஷன் எப்படி இருக்கப் போகிறதோ? தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியும்.
–ஆரா
’விடுதலை’ பட விவகாரம்: கொந்தளித்த சோளகர் தொட்டி ஆசிரியர்!
கல்லூரியில் இருந்து விலகிய மாணவி: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!