மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட சம்பவத்திற்கு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மல்லிகார்ஜுன் கார்கே இன்று (செப்டம்பர் 13) கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி, கோவை கொடிசியா வளாகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு குறு, தொழில் முனைவோர்கள், பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகளுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நடத்தினார்.
இந்த கலந்துரையாடலில் பேசிய ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன், இனிப்பு மற்றும் கார உணவு வகைகளுக்கு ஒரே அளவிலான ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனைக் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று(செப்டம்பர் 12) சந்தித்த அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியது. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த சந்திப்பைத் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் “அன்னபூர்ணா உணவகம் போன்ற சிறு வியாபாரத்தின் உரிமையாளர், மக்களுக்குச் சேவை செய்யவேண்டிய அரசியல்வாதிகளிடம் ஜிஎஸ்டி-யை எளிமைப் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். ஆனால் அவரது கோரிக்கைக்கு, ஆணவத்துடன் பதிலளிக்கப்படுகிறது.
இதுவே, ஒரு கோடீசுவரர் அரசு விதிமுறைகளை வளைக்கவோ, சட்டத்தை மாற்றவோ முற்பட்டால், மோடி ஜி அவருக்குச் சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்கிறார்.
பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இதுவரை அவமானம் மட்டும்தான் படவில்லை. இப்போது அதுவும் நடந்தேறிவிட்டது. அதிகாரத்தில் இருக்கும் நபர்களின் ‘ஈகோ’ அடிபடும் போது இதுபோன்ற நிகழ்வுகள் தான் ஏற்படும்.
சிறு, குறு, தொழிற்சாலைகள் பல வருடங்களாக ஜிஎஸ்டியிலிருந்த விலக்கு கேட்டு வருகின்றன. மேலும், இந்த திமிர் பிடித்த மத்திய அரசு, இந்த தொழிற்சாலைகளின் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால், ஒரு வரி விகிதம் கொண்ட எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி பல லட்ச வியாபாரிகளின் பிரச்சினைகளைத் தீர்த்திருக்கும் என்பதை புரிந்துகொண்டிருப்பார்கள்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் “அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்திய சம்பவம், அவரது ஆணவத்தையும், அதிகார மமதையும் காட்டுகிறது.
பொது நிகழ்ச்சிகளில் நிர்மலா சீதாராமன் இது போன்று தான் தொடர்ந்து இப்படி நடந்துக்கொண்டுவருகிறார். அன்னபூர்ணாவின் உரிமையாளர் மோடி அரசாங்கத்திடம் ஜிஎஸ்டி-யில் உள்ள குறைகளைப் பற்றி கேள்வி கேட்கிறார். ஆனால், நிதி அமைச்சரோ அவரை பார்த்து இளக்காரமாகச் சிரிக்கிறார். பின்னர் அவரை தனியாக அழைத்து கேமிரா முன்பு மன்னிப்பும் கேட்க வைக்கிறார்.
பாஜக அரசு பெருமுதலாளிகளுக்கு மட்டும்தான் உதவவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு முன் இந்த சம்பவத்திற்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உலகின் மிக அழகான பாடி பில்டர்… 36 வயதில் வந்த அட்டாக்… இப்படி உயிர் போச்சே!
அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தோமா? – வானதி சீனிவாசன் பேட்டி!