டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுச் சுமத்தி சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களது போராட்டம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பிரிஜ் பூஷண் சரங் சிங் மீது நேற்று (ஏப்ரல் 28) டெல்லி காவல்துறை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை இன்று (ஏப்ரல் 29) காலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார்.
இந்தநிலையில் இன்று மாலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டக்காரர்களை சந்தித்து தனது ஆதரவை அளித்துள்ளார். போராட்டக்காரர்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது,
“நாட்டை நேசிக்கக்கூடிய யாராக இருந்தாலும் கட்சி பேதமின்றி மல்யுத்த வீரர்களுக்கு தங்களது ஆதரவை அளியுங்கள். அவர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை. அனைத்து விளையாட்டு வீரர்களுக்காகவும் போராடுகிறார்கள்.
நீதிமன்றம் தலையிட்டு பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதன் மூலம் அவர் பெரிய அதிகாரம் படைத்தவர் என்பது தெரியவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்த பெண் வீரர்கள் அனைவரும் நமது மகள்கள்.
அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பிரிஜ் பூஷண் சரண் சிங் எவ்வளவு அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
உதயநிதியின் மாமன்னன்: அப்டேட் வெளியிட்ட படக்குழு!
ரெய்டு எதிரொலி… ஆட்டிப் படைத்த ஆடிட்டர்- ஆடிப் போன அமைச்சர்கள்!