தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியினர், ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் அத்துமீறி நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பொதுவாக ரயில் நிலையங்களில் வரவேற்கவோ அல்லது வழி அனுப்பவோ செல்பவர்கள் பிளாட்பாரம் டிக்கெட் அவசியம் எடுக்கவேண்டும். அப்படி டிக்கெட் இல்லாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.
மறுபுறம் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட நிமிடம் மட்டுமே ரயில்கள் நின்று செல்லும்.
ஆனால் பாஜகவினரைப் பொறுத்தவரை ரயிலில் வரும் மூத்த தலைவர்களை வரவேற்பதற்காக, பிளாட்பாரம் டிக்கெட் கூட எடுக்காமல், ரயிலை அதிக நேரம் நிறுத்திவைத்து வருகிறார்கள்” என்கின்றனர், ரயில்வே ஊழியர்கள்.

வாரணாசியில் நவம்பர் 19ம் தேதி நடைபெற இருக்கும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழகத்திலிருந்து 216 பிரதிநிதிகள் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டனர்.
இவர்களை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ராமேஸ்வரத்தில் இருந்து வழியனுப்பிவைத்தார்.
இதையடுத்து, மயிலாடுதுறை வந்த அந்த ரயிலை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரயில் பெட்டியில் ஏறி அதில் பயணம் செய்தவர்களையும் வாழ்த்தினார்.
இந்த ரயில் பயணத்தால், அண்ணாமலைக்கு சென்னை வரை உள்ள ரயில் நிலையங்களில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குறிப்பாக, இன்று (நவம்பர் 17) காலை 8.40 மணிக்கு சிதம்பரம் இரயில்வே நிலையத்திற்கு வந்த ரயில், மீண்டும் 8.42 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 8.52 மணிக்கு வந்து 8.57 மணிக்குத்தான் புறப்பட்டது.
இதற்குக் காரணம், அண்ணாமலைக்கு கொடுத்த வரவேற்புதான் என்கிறார்கள், ரயில்வே ஊழியர்கள்.
சிதம்பரத்தில் கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் மருது மற்றும் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம் தலைமையில் சுமார் 150 பேர் அண்ணாமலையை ரயிலிலிருந்து இறக்கி, அவருக்கு ஆரத்தி எடுத்து மாலை மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர்.

அதனால் அந்த ரயில் மூன்று நிமிட நேரம் அதிகமாய் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
அதுமட்டுமின்றி, அந்த ரயில் நிலையத்துக்குள் வந்த 150 பேரில் 15 பேர் மட்டுமே பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துள்ளனர். மற்றவர்கள் யாரும் டிக்கெட் எடுக்கவில்லை என்கின்றனர் ரயில்வே ஊழியர்கள்.
அதேபோல் கடலூர் முதுநகரில் ஒரு நிமிடம் நிற்கக்கூடிய ரயில், மூன்று நிமிடம் கூடுதலாகவும் நின்றுள்ளது. விழுப்புரத்தில் அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுத்த 75 பேரும் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல் சென்னை வரை அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதில் ரயிலின் நேரமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
பல ரயில் நிலையங்களில் பாஜகவினரும் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
மேலும் அண்ணாமலைக்கு தொண்டர்கள் வழங்கிய வரவேற்பால், ரயிலின் நேரத்தை சரிகட்ட, வழக்கமாகச் செல்லும் வேகத்தைவிட சற்று கூடுதலாக இயக்கியுள்ளனர் ரயில் டிரைவர்கள்.
அண்ணாமலையின் இந்த வரவேற்பு நிகழ்விற்கு சிஐடியூ சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வணங்காமுடி
Comments are closed.