சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை குறிப்பிட்டு இன்று (ஜூன் 21) கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 130க்கு மேற்பட்டோரில், இதுவரை 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட பலர் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கள்ளச்சாராய மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, பாஜகவினர் தமிழக அரசு மீது தொடர் குற்றச்சாட்டினை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே இரண்டாம் நாள் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சட்டமன்றத்திற்கு கறுப்பு உடை அணிந்து அதிமுக, பாமக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர்.
தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரம் தொடங்கியதும், ஒத்தி வைத்து கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக வந்து தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி பதாகைகளை ஏந்தி பிடித்த படியும் முழக்கமிட்டனர். அப்போது சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். கேள்வி நேரம் முடிந்த பின்னர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுமாறு கூறினார். அதனை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களையும் இன்று ஒருநாள் அவை நடவடிக்கையில் கலந்துக்கொள்ள கூடாது எனக் கூறி, சபையில் இருந்து உடனே வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்து குண்டுகட்டாக சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக, பாஜக உள்ளிட்ட பிற கட்சி எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சட்டென உச்சம் தொட்ட தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?
கள்ளக்குறிச்சி… சிதைந்த கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள்! தேவை தொலைநோக்குத் திட்டம்!