”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் இன்று (ஜூன் 22) தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 55ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் இன்று கள்ளக்குறிச்சி சென்று கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “கருணாபுரம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் பட்டியலினத்தவர்கள். பாதிப்புக்கு காரணமானவர்கள் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எனவே இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. பாதிப்புக்கு உண்மையிலேயே காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ரவி வர்மன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் : எச்.ராஜா கைது!
விஜய் 50வது பிறந்தநாள் : அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!