ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் தாக்கம் காரணமாகவே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன.
ஆனால், சுமார் 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்து நேற்றைய தினம் (மார்ச் 14) மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது,
“ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் தாக்கம் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைத்துள்ளது.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைப்பு ஒரு நல்ல விசயம். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மத்திய அரசிடம் சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என ராகுல்காந்தி தொடர்ந்து குறிப்பிட்டு கொண்டிருக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதுமாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதைப் போன்று, மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
MS Dhoni: 2024 ஐபிஎல் தொடரோடு தோனி ஓய்வு பெறுகிறாரா?… முன்னாள் வீரர் சூசகம்!