கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த தேசியத் தலைவர்கள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை அதன் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று (மே 1) பெங்களூருவில் வெளியிட்டார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
- கர்நாடகாவில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் விரைவாக நாடு கடத்துவதை உறுதி செய்வதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) அமல்படுத்தப்படும்.
- வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி என வருடத்திற்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
- வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.
- மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்.
- மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும்
- கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972ஐச் சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
- அரசுப் பள்ளிகளை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்காக, புகழ்பெற்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அரசு கூட்டு சேரும்.
- இளைஞர்கள் ஐஏஎஸ்/கேஏஎஸ்/வங்கி/அரசு வேலைகளுக்கான பயிற்சியைத் தொடர நிதிச் சலுகைகள் வழங்கப்படும்.
- மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.
- மூத்த குடிமக்களுக்கு வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை இலவசம்
- பெங்களூருவை ‘மாநில தலைநகர் மண்டலமாக’ நியமித்து விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சார்ஜிங் நிலையம் அமைத்தல் மற்றும் BMTC பேருந்துகளை முழு மின்சார பேருந்துகளாக மாற்றுவதன் மூலம், கர்நாடகாவை மின்சார வாகனங்களின் முதன்மை மையமாக மாற்றப்படும்.
இலவசங்களை ஒழிக்க வேண்டும் என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பிரதமர் பிரச்சாரம் செய்திருந்தார். இந்நிலையில் பாஜக இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச அறிவிப்புகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
மிரட்டும் வடிவேலு… கோபத்தில் உதயநிதி: மாமன்னன் போஸ்டரில் உள்ள குறியீடு என்ன?