நீட் தேர்வு மோசடிக்கு முடிவு கட்டுவது எங்கள் பொறுப்பு என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 14) தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “ஐம்பெரும் விழா” நடைபெறுகிறது.
“ஐம்பெரும் விழா”
அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் தொடக்க விழா, தமிழ்ப் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, 67வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கும் விழா என பள்ளிக்கல்வித்துறை சார்பாக “ஐம்பெரும் விழா” இன்று (ஜூன் 13) நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரோடு… அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து முதல் விழா!
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் நான் கலந்து கொள்ளும் முதல் அரசு விழாவாக பள்ளிக்கல்வித்துறையின் ‘ஐம்பெரும் விழா’ இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷிடம் தெரிவித்தேன்.
பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில், 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் காலை உணவுத்திட்டம், 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இல்லம் தேடி கல்வித்திட்டம், 28 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வரும் நான் முதல்வன் திட்டம், 23 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் எண்ணும் எழுத்தும் திட்டம் என பல முக்கியமான திட்டங்கள் உள்ளன.
பெண்களின் உயர்கல்விகளுக்காக “புதுமை பெண் திட்டம்” கொண்டுவரப்பட்டது. அதேபோல், மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் “தமிழ் புதல்வன் திட்டம்” கொண்டு வரப்படும் என ஏற்கனவே தெரிவித்தேன். இந்த “தமிழ் புதல்வன் திட்டம்” வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
படிங்க… படிங்க… படிச்சுட்டே இருங்க!
நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ- மாணவிகளை 100 விழுக்காடு தேர்ச்சி பெற வைத்த 1,728 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.
எந்த பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்தாலும் அது பாராட்டிற்குரியதுதான். ஆனால், தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றவர்கள் சிறப்பு பாராட்டிற்குரியவர்கள்.
உலகில் உள்ள எந்த மாணவர்களுக்கும் சவால் விடும் வகையில் தமிழக மாணவர்கள் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதுதான் என் கனவு.
எத்தனை நிதி நெருக்கடி இருந்தபோதிலும், பள்ளிக்கல்வித்துறைக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, “ படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க”.
நீட் தேர்வு மோசடிக்கு முடிவு கட்டுவது எங்கள் பொறுப்பு
கல்விதான் யாரிடமிருந்தும் திருட முடியாத முதல் சொத்து. ஆனால், அந்த கல்வியிலேயே மத்திய அரசு மோசடி செய்ததை நீட் தேர்வு மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதனால் தான் அதனை கடுமையாக எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வு என்பது ஒரு மோசடி என்று முதலில் எதிர்த்தது நமது தமிழ்நாடுதான்.
அதை தற்போது இந்தியாவே சொல்ல தொடங்கி உள்ளது. நீட் தேர்வு மோசடிக்கு முடிவு கட்டுவது எங்கள் பொறுப்பு.
மாணவர்கள் படிப்பதற்கு சமூகம், பொருளாதாரம் என எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் எண்ணம்” என உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…