வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் மோடி நெல்லையில் பேசிய பொதுக்கூட்ட வீடியோவும், மோடியின் பேச்சுக்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையும் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“பிப்ரவரி 28 ஆம் தேதி தூத்துக்குடி அரசு விழாவிலும், நெல்லை அரசியல் பொதுக்கூட்டத்திலும் பேசிய பிரதமர் மோடி திமுக அரசையும், திமுகவையும் கடுமையாகத் தாக்கினார். மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த திமுக அரசு முட்டுக் கட்டை போடுகிறது, திமுக தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்படும், திமுகவை தேடவேண்டிய நிலை ஏற்படும் என்றெல்லாம் கடுமையாக தாக்கினார் மோடி.
இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், ‘தோல்வி பயத்தில் பிரதமர் பேசியிருக்கிறார். தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு’ என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
காங்கிரசை மட்டுமே குறிவைத்து தாக்கும் பிரதமர் மோடி ஒரு மாநிலக் கட்சியான திமுகவை இவ்வளவு இறங்கியடித்திருப்பதற்கு காரணம் என்ன என்று டெல்லி வட்டாரங்களிலும், தமிழக பாஜக வட்டாரங்களிலும் பேசியபோது புதிய தகவல்கள் கிடைத்தன.
நெல்லை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதமர் மோடி அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த க்ரீன் ரூமில் (பிரதமருக்கான தனிப்பட்ட அறை) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோடு தனியாக சுமார் இருபது நிமிடங்கள் உரையாடியிருக்கிறார். அப்போது அண்ணாமலை தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் திட்டமிட்டிருப்பது பற்றியும், இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தினாலே மக்களின் மனநிலையை மாற்றிவிட முடியும் என்றும், அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே மத்திய உளவுத் துறை மூலம் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவின் தேர்தல் பட்ஜெட் பற்றி விரிவாக விசாரித்து அறிக்கை அனுப்பப்பட்டு அதுவும் பிரதமர் பார்வைக்கு சென்றுள்ளது.
திமுக ஒவ்வொரு தொகுதிக்கும் பத்து லட்சம் பேருக்கு தலா 300 ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக தொகுதிக்கு 30 கோடி ரூபாய் ஒதுக்க தீவிரமான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும், இது தவிர அந்தந்த வேட்பாளர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப வாக்காளர்களுக்கு கூடுதலாக வழங்கவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும் ரிப்போர்ட் சென்றிருக்கிறது. அதிமுகவில் பண வசதி மிக்கவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். போட்டியிட விரும்புபவர்கள் தலைமையிடம் 15 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்று அதிமுக தலைமை கூறியிருப்பதாகவும் மத்திய அரசுக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது.
இந்த நிலையில்தான் திமுக, அதிமுக இரண்டையும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க விடாமல் செய்ய திட்டமிட்டிருக்கிறது பாஜக. அதிமுகவை விட இந்த விஷயத்தில் திமுக மேல்தான் கூர்மையான பார்வையை பதித்திருக்கின்றன மத்திய அரசின் ஏஜென்சிகள்.
கடந்த 2019 எம்பி தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக சார்பில் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதையடுத்து அங்கே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் எப்படி கண்காணிப்பாளர்களை நியமிக்க இருக்கிறதோ… அதுபோல வருமான வரித் துறை, அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் கண்காணிப்பாளர்களை அமர்த்துவது என்று திட்டமிட்டுள்ளது பாஜக. தேர்தல் அறிவிக்கை வந்த பிறகு மத்திய அரசுக்கு அதிகாரம் ஏதும் இல்லை என்பது சட்ட ரீதியான நிலையாக இருந்தாலும்… எதார்த்தத்தில் அப்படி இல்லை. தேர்தல் ஆணையமே பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை கண்காணிப்பை அதிகப்படுத்தி… வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்ட பணத்தை கைப்பற்ற வேண்டும். இவ்வாறு சுமார் பத்து தொகுதிகளிலாவது கைப்பற்றி அந்தத் தொகுதிகளின் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்கான ஏற்பாடுகளையும் இப்போதே வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் தொடங்கிவிட்டன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐபிஎல் தொடரில் அதிக ‘தோல்விகளை’ சந்தித்த கேப்டன்கள்
எலக்ஷன் ஃப்ளாஷ்: கிருஷ்ணகிரி… காங்கிரஸிடம் இருந்து பறிக்கிறதா திமுக?
Comments are closed.