அரசியலமைப்பு சட்டம் முழுமையடையவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

Published On:

| By Monisha

governer rn ravi

இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்னும் முழுமையடையவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (நவம்பர் 25) பேசியுள்ளார்.

கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதை முன்னிட்டு நாளை இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்ட தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, “இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. அதை நாம் உணர வேண்டும். மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா என விவாதிக்க வேண்டிய நேரம் இது.

சட்ட கல்லூரிகள் அதற்கு ஏற்ற இடம். நீதிமன்றங்களில் மட்டுமல்லாது சட்ட பல்கலைக்கழகங்களிலும் அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். தற்போதைய காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது” என்று பேசினார்.

தமிழக ஆளுநருக்கு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி நடந்து கொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனிடையே மசோதாக்கள் நிலுவையில் இருந்தால் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்று ஆளுநர் கூறியதற்கு கண்டனங்கள் எழுந்தன.

”தமிழ்நாடு ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன், 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்” என்று ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது.

மேலும் பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தாக்கல் செய்த வழக்கு மீது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், “மாநிலத்தின் ஆளுநராக அரசியலமைப்பில் சில அதிகாரங்கள் இருந்தாலும், அவற்றைக் கொண்டு சட்டமன்றத்தின் அதிகாரத்தை முறியடிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கே உண்மையான அதிகாரம் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தது. இவ்வாறு மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இன்று பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சேரி மொழி… குஷ்பு பிடிவாதம்… காங்கிரஸ் போராட்டம்!

அகற்றப்பட்ட ஆர்டர்லிகள்… எச்சரித்த முதல்வர்… .கைது ஆவாரா மாஜி டிஜிபி நட்ராஜ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share