கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்கத் தவறிய திமுக அரசை கண்டித்து பாஜகவினர் இன்று (ஜூன் 22) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 140க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கடந்த 18ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ள மருத்துவமனைகளில் பலர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று (ஜூன் 22) மாநிலம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எச்.ராஜா கைது
திமுக அரசை கண்டித்து இன்று (ஜூன் 22) மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விருதுநகர், கிருஷ்ணகிரி போன்ற பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில செயலாளர் அஸ்வதாமன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பாஜகவினர் கைது குறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 22), “கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட நூற்றுக்கணக்கான பாஜக சகோதர சகோதரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் திமுகவினருக்கு உள்ள தொடர்பும், பொதுமக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழக பாஜகவின் சகோதர சகோதரிகளை முடக்கப் பார்க்கிறது.
இந்த அடக்குமுறைக்கு பாஜக அஞ்சப் போவதில்லை. பிற மாவட்டங்களிலும், இன்று மதியமும், மாலையும், கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் 50வது பிறந்தநாள் : அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!
GOAT : டபுள் ஆக்சனில் ட்ரீட் கொடுத்த விஜய்… அப்டேட் விட்டு அலறவிடும் அர்ச்சனா!
Comments are closed.