“எல்லோரையும் நேசிக்கின்ற, எல்லோராலும் நேசிக்கப்பட்ட முரசொலி செல்வத்தின் மறைவு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அவரது பெயர் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்க முன்னோடியும் கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வம் இன்று (அக்டோபர் 10) காலை பெங்களூருவில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.
அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் ஆசிரியராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முரசொலி செல்வம் பணியாற்றி வந்தார். அதில் சிலந்தி என்ற பெயரில் அவர் நக்கலும் நையாண்டியுமாக எழுதிய கட்டுரைகள் வாசகர்களால் அதிகம் விரும்பி படிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முரசொலி செல்வம் மறைவு செய்தி கேட்டு திடுக்கிட்டு போனதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர், “திமுகவின் மீது உறுதியும், விசுவாசமும் கொண்டு, முரசொலியில் புனை பெயரில் எழுதுவதில் வல்லவரான எனது ஆரூயிர் சகோதரர் முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு திடுக்கிட்டு போனேன்.
1972ஆம் ஆண்டு காலத்தில் அவருக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளது என்று கூறி மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அப்போது அவரை சந்திக்க நானும் கலைஞரும் அடிக்கடி போவோம்.
முரசொலி மீது அதிமுக அரசு குற்றச்சாட்டுகளை வைத்து, அதற்காக அதன் ஆசிரியர் முரசொலி செல்வம் மீது போலீசில் புகார் அளித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சட்டமன்றத்தில் அமைக்கப்பட்ட விசாரணை கூண்டில் சிறிதும் கூட அச்சமின்றி மெல்லிய குரலில் தனது கருத்தை வலுவாக வைத்தார்.
முரசொலி பத்திரிகையிலும், சன் தொலைக்காட்சியிலும் அவரது பங்களிப்பு மிக அதிகம். மெல்லிய குரலில் பேசி எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.
என்னிடத்தில் அவர் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கூட அவர் என்னைப் பற்றி தவறாக பேசியது கிடையாது. நான் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாணவர் பேரவைத் தேர்தலில், நீங்கள் தான் நிற்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்.
அவரது மறைவை எப்படி மனைவி செல்வி தாங்கி கொள்வார் என்று தெரியவில்லை. எல்லோரையும் நேசிக்கின்ற, எல்லோராலும் நேசிக்கப்பட்ட முரசொலி செல்வத்தின் மறைவு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு.
அவர் மறைந்தாலும் முரசொலி இருக்கும் வரை, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அவரது பெயர் நிலைத்திருக்கும்.
அவரது பிரிவால் வாடும் முதலமைச்சர் ஸ்டாலின், தங்கை செல்வி, குடும்பத்தினருக்கும், திமுக தோழர்களுக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என வைகோ தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இன்று காலை வரை முரசொலிக்கு கட்டுரை எழுதிய முரசொலி செல்வம் : ஸ்டாலின் உருக்கம்!
ரத்தன் டாடா மறைவு: எனக்கு மிகவும் பிடித்த G.O.A.T. நீங்கள்…” அனுபம் கெர் உருக்கம்!