மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பதிலளித்தார்.
பிரதமர் மோடி அரசு மீது மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 9) இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.
எதிர்க்கட்சி எம்.பிக்களின் உரைக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிகவும் நம்பிக்கைக்குரிய பிரதமராக மோடி உள்ளார். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார்.
மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. நாட்டில் பிரதமர் மீதும், இந்த அரசு மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்ற ஒரு மாயையை உருவாக்கவே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஊழலையும், குடும்ப அரசியலையும் தகர்த்து எறிந்து செயல்திறன் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தும். தங்கள் அரசாங்கத்தை காப்பாற்றி கொள்ள ஊழல் செய்வது தான் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குணம்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்று அவர்கள் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) கூறி வருகிறார்கள். ஆனால், கடனை தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் விவசாயிகள் கடன் வாங்க வேண்டிய சூழல் இல்லை என்ற அமைப்பை நாங்கள் உருவாக்குவோம்.
நீங்கள் திட்டங்களை உருவாக்குகிறீர்கள். ஆனால் அதனை செயல்படுத்துவதில்லை. ஆனால் திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
இந்த அவையில் உள்ள ஒருவரின் அரசியல் வாழ்க்கை 13 முறை தொடங்கப்பட்டது. அவர் 13 முறையும் தோல்வியடைந்தார்” என்று ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அமித் ஷா விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கலாவதி என்ற ஆதரவற்ற பெண்ணை ஒரு தலைவர் பார்க்கச் சென்றார். அதன் பிறகு அந்த ஆட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்தது. ஆனால் கலாவதியின் வாழ்க்கையில் என்ன நடந்தது? கலாவதிக்கு வீடு, ரேஷன், சுகாதாரம் ஆகியவற்றை செய்து கொடுத்தது பிரதமர் மோடி தான்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏன் ஜன் தன் யோஜனா திட்டத்தை எதிர்த்தார்கள். ஏழைகளுக்காக மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கினால் அதில் 15 பைசாதான் அவர்களைச் சென்றடைகிறது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னார். ஆனால், இன்று முழு தொகையும் ஏழைகளைச் சென்றடைகிறது” என்று தொடர்ந்து மத்திய பாஜக அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே சென்றார்.
இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் குறித்து அமித்ஷா பேச தொடங்கினார். அப்போது, மணிப்பூரில் வன்முறை நடந்துள்ளது என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அதை யாரும் மன்னிக்க முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதும் அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதும் வெட்கக்கேடானது.
மணிப்பூர் தொடர்பான விவாதத்திற்கு நாங்கள் தயாராக இல்லை என்று கூறினார்கள். ஆனால் முதல் நாளிலிருந்தே மணிப்பூர் குறித்து விவாதிக்க தயாராக தான் இருந்தோம். மணிப்பூர் வன்முறை போன்ற முக்கியமான விஷயத்தில் உள்துறை அமைச்சரின் பார்வையை முன்வைக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை.
மணிப்பூரில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக அரசு உள்ளது, மே 3 முதல், ஒரு ஊரடங்கு உத்தரவு கூட விதிக்கப்படவில்லை. மியான்மரில் அதிகாரத்திற்கு வந்த குக்கி ஜனநாயக முன்னணி மியான்மர் எல்லையில் வேலிகள் இல்லை.
இதனால் மியான்மரில் இருந்து குக்கி சமூக மக்கள் மிசோரம், மணிப்பூர் மாநிலத்திற்கு வருகை தர ஆரம்பித்தனர். இது தான் பிரச்சனைக்கு அடிப்படையானது.
மக்கள் தொகையின் அதிகரிப்பு மெய்தி சமூகத்திற்குள் பாதுகாப்பின்மையை உருவாக்கியது. ஏப்ரல் 29 ஆம் தேதி வதந்திகள் பரவ தொடங்கி அமைதியின்மை ஏற்பட்டது. மணிப்பூர் உயர்நீதிமன்றம் ஏப்ரல் மாதம் வழங்கிய தீர்ப்பும் நிலைமையை மோசமாக்கியது. இதனால் மோதல்கள் வெடித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு போதைப் பொருள் வரத்தும் உள்ளது.
மணிப்பூர் முதல்வர் மத்திய அரசுக்கு ஒத்துழைக்கிறார். அவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. நாங்கள் 16 வீடியோ கான்பரன்ஸ் நடத்தி 36,000 பாதுகாப்புப் படையினரை அங்கு அனுப்பினோம். 28 நாட்களில் ரயில்வே இணைப்பை ஏற்படுத்தி நிலைமையை சீரமைத்தோம்.
இதுவரை 152 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் மே மாதத்தில் 107 பேரும், ஜூன் மாதத்தில் 30 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 1,106 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரில் தற்போது வன்முறை குறைந்து வருகிறது. அதை அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.
ராகுல் காந்தியை நாங்கள் தான் ஹெலிகாப்டரில் செல்ல பரிந்துரைத்தோம். ஆனால் அவர் சாலை மார்க்கமாக செல்வேன் என்று அரசியலில் ஈடுபட்டார். அதனால் போலீஸ் அவரை தடுத்து நிறுத்தினர்.
மே 4 ஆம் தேதி நடந்த சம்பவத்தின் வீடியோவில் உள்ள செயல்களை உலகில் எங்கும் ஆதரிக்க முடியாது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ஒரு நாள் முன்னதாக அந்த வீடியோ ஏன் வெளியிடப்பட்டது. வீடியோ வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நான் மூன்று நாட்கள் இரவும் பகலும் அங்கு இருந்தேன். மணிப்பூர் கலவரம் தொடர்பான 6 வழக்குகள் சிபிஐ வசம் இருந்தன. மேலும் கூடுதலாக 11 வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. 80 சதவீத மாணவர்கள் வருகையுடன் 98 சதவீத பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் எல்லையைப் பாதுகாக்க வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பயோமெட்ரிக் சேகரிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. ஒரு விவாதம் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இரு சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்திய அரசுடன் அமர்ந்து தீர்வை நோக்கிச் செயல்படுமாறு நான் அவர்களிடம் கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். நான் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து அமைதிக்காக வாதிடுவார்கள் என்று நம்புகிறேன்.
நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சியில் அதிகபட்ச வகுப்புவாத வன்முறை நடந்தது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயரை ‘இந்தியா’ என்று மாற்ற வேண்டிய அவசியம் என்ன? ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது ரூ. 12 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்தது. அதனால் அவர்களால் அதே பெயருடன் தொடர முடியாது என்பதால் தான் பெயரை மாற்றியுள்ளனர்” என்று பேசினார் அமித் ஷா.
அமித்ஷா பதிலளித்ததற்கு பிறகு பிரதமர் மணிப்பூர் விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அவையில் கூச்சலிட்டனர்.
அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை பிரதமர் மோடி பதிலளிப்பார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிவித்தார்.
மோனிஷா
”அவரால் தான் நான்…”: இயக்குநர் சித்திக் மறைவால் சூர்யா உருக்கம்!
Comments are closed.