22 வருட விசாரணைக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜனவரி 10) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002ல் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்த சென்னை மாமன்ற கூட்டத்தில் கண்ணப்பர் திடல் மீன் அங்காடி தொடர்பான டெண்டர் விஷயமாக திமுக சார்பில் பிரச்சனை எழுப்பப்பட்டது.
அப்போது திமுக கவுன்சிலர்களுக்கும் அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் அதிமுக கவுன்சிலர்களான ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்க்கரசி, குமாரி உள்ளிட்டோர் தாக்கப்பட்டதை அடுத்து சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் சுகுமார் பாபுவும், சென்னை மாமன்ற செயலாளர் ரீட்டாவும் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் மா. சுப்பிரமணியன், மற்றும் திமுக கவுன்சிலர்கள் வி.எஸ். பாபு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்வேந்தன், நெடுமாறன், சௌந்தர்யா, மூர்த்தி ஆகிய ஏழு பேருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவர்கள் மீது கலகம் செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதம் கொண்டு தாக்குதல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலுவையிலே இருந்த இந்த வழக்கில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்த காவல்துறை, கடந்த 2019 ஆம் ஆண்டு தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
7 பேரும் விடுதலை!
இந்த வழக்கு விசாரணை எம்பி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜெயவேல் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, குற்றங்கள் எதுவும் நிருபிக்கப்படவில்லை என்று கூறி மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
22 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை கிடைத்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
நீதிக்கு கிடைத்த வெற்றி!
அப்போது அவர், “2002ஆம் ஆண்டு ஆளுங்கட்சியாக அதிமுக இருந்த சமயத்தில் சென்னை மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளானார்கள். குறிப்பாக செல்வி செளந்தரராஜன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல நாள் சிகிச்சை பெற்றார்.
அதே போல் கிருஷ்ணமூர்த்தியின் 5 பற்கள் உடைந்த நிலையில் 9 தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நெடுமாறன் தலையில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இப்படி திமுக உறுப்பினர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில், எங்கள் மீது அதிமுக அரசு வழக்குப்போட்டு, கடந்த 22 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நாங்கள் 7 பேரும் நீண்ட காலமாக நீதிமன்ற படிகளில் ஏறிக்கொண்டிந்தோம். இன்று தீர்ப்பு கிடைத்துள்ளது. மிகப்பெரிய அளவில் நீதிக்கு கிடைத்த வெற்றியாகவே இதை பார்க்கிறோம்” என்று மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெண்களை திரும்பி பார்த்தால்…: ஸ்டாலின் கொண்டு வந்த புதிய சட்டம் : தண்டனைகள் என்னென்ன?
’மின்னல் வேக அமைச்சர்’ : பாராட்டி தள்ளிய அதிமுக எம்.எல்.ஏ… வியந்த சட்டமன்றம்