பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து அங்கு தடயவியல் நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில், அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.
பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிடிவி காட்சியை வெளியிட்ட தேசியப் புலனாய்வு முகமை (N.I.A.), அதில் உள்ள மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து வந்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துகின்றனர்!
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
அவர், “கர்நாடகாவில் இந்துகளை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு செயல்கள் அரங்கேறுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துகின்றனர். கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என சிலர் கோஷமிடுகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்கள், பெண்கள் மீது ஆசிட் வீசுகின்றனர். கடையில் அமர்ந்திருப்பவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இங்கு என்ன ஆட்சி நடக்கிறது?” என ஷோபா ஆவேசமாக பேசியிருந்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான ஷோபா கரந்தலஜே இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய சர்ச்சை பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி என்.ஐ மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளனர்.
https://twitter.com/mkstalin/status/1770096621734494493
பாஜக அமைச்சரின் பிளவுபடுத்தும் பேச்சை மறுப்பார்கள்!
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “பொறுப்பற்ற முறையில் பேட்டியளித்த மத்திய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படி பேச ஒருவர் NIA அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்புடன் நெருக்கமான தொடர்புடையவராக இருக்க வேண்டும். இவர்களை தவிர மற்றவர்கள் இதுகுறித்து ஆதாரமின்றி பேச எந்த அதிகாரமும் இல்லை.
மத்திய பாஜக அமைச்சரின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் மறுப்பார்கள். பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இந்த வெறுப்புப் பேச்சை கவனத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிப்பதா?
அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்தியத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் அரசியல் புதிய தாழ்வைத் தொட்டுள்ளது!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், “ராமேஷ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தை தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், மத்திய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு எப்படி இவ்வளவு அபத்தமான கருத்தை வெளியிட தைரியம் வந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரது விஷமத்தனமான பேட்டியை வன்மையாக கண்டிக்கிறேன்.
பா.ஜ.க.வின் இழிவான பிரித்தாளும் அரசியல் புதிய தாழ்வைத் தொட்டுள்ளது. பாஜகவின் கேவலமான கூற்றுகளை தமிழர்களும், கன்னட சகோதர சகோதரிகளும் நிராகரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
என்ஐஏ ஷோபாவை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது மகத்தான தேசத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வெறுப்புப் பேச்சுக்காக அவருக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
எங்கள் மீதான உங்கள் வெறுப்பை நிறுத்துங்கள்!
தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது அறிக்கையில், “மத்திய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் பொறுப்பற்ற கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜனநாயகத்தை பாதுகாக்க விரைந்து செயல்பட வேண்டும். நான் வலியுறுத்துகிறேன். இது போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் அவரது வெறுக்கத்தக்க கருத்துகளின் அடிப்படையை என்ஐஏ விசாரிக்க வேண்டும்.
பா.ஜ.க.வின் பிரித்தாளும் பேச்சு தமிழகத்திற்கு மட்டுமல்ல, நமது தேசத்தின் நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். எங்கள் மீதான உங்கள் வெறுப்பை நிறுத்துங்கள்” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்களின் கடும் கண்டனத்தை தொடர்ந்து தனது பேச்சுக்கு மத்திய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலஜே தனது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மன்னிப்பு கோருகிறேன்!
அவர், “என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு, எனது கருத்துக்கள் வலியை ஏற்படுத்தியதை உணர்ந்து, அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். எனது கருத்துக்கள் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்று ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புடையவருக்கு மட்டுமே. எனது பேச்சால் தமிழ்நாட்டில் இருந்து பாதிக்கப்பட்ட எவருக்கும், என் இதயத்தின் ஆழத்திலிருந்து, நான் மன்னிப்பு கேட்கிறேன். மேலும், எனது முந்தைய கருத்துக்களை திரும்பப் பெறுகிறேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
40 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!
மாசுபட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு : மிக மோசமான நிலையில் இந்தியா!