ஹரியானா பாஜக… காஷ்மீரில் தேமாக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!

Published On:

| By Kavi

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றன.

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 68 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று (அக்டோபர் 8) எண்ணப்பட்டது.  காலையில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், அதன்பிறகு பாஜக முன்னிலை வகித்தது.

தேர்தல் ஆணையத்தின் இரவு 9.45 மணி அறிவிப்பு படி, ஹரியானாவில் பாஜக வென்றுள்ளது. 48 தொகுதிகளை பிடித்து பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.

காங்கிரஸ் 36 இடங்களில் வெற்றி பெற்று ஒரு இடத்தில் முன்னிலையில் இருக்கிறது. இந்திய தேசிய லோக் தள கட்சி 2 இடத்திலும், சுயேச்சைகள் 3 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

ஹரியானாவில் பாஜக வெற்றியை  அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர்கள் தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, “கூட்டணி கட்சிகளை விழுங்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. மக்கள் தங்கள் சொந்த கலாச்சாரத்தையே வெறுக்கும் நாட்டை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது. பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் மீது காங்கிரஸ் பல கொடுமைகளைச் செய்துள்ளது” என்று எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார் மோடி.

தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கும், முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இந்தியா கூட்டணி 49 இடங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் பிடித்து ஆட்சி அமைக்கவுள்ளன. பாஜக 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 3, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, ஆம் ஆத்மி 1, சுயேட்ச்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நயன் – விக்கி திருமண வீடியோ : விரைவில் வெளியீடு!

ஹரியானா சட்டமன்ற தேர்தல்… பாஜக ஹாட்ரிக் வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel