சமூக விரோதிகள் இன்னும் நாட்டில் இருக்கிறார்கள். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை விவகாரத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, பாமக தலைவர் ஜி.கே மணி உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானம் மீது பேசிய
தமிழக வாழ்வுரிமைகட்சி தலைவர் வேல்முருகன்,
தமிழகத்தில் யாரும் இதுபோன்ற செயலை செய்யாமல் இருக்க முதலமைச்சர் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவம் நடைபெற்றவுடன் முதலமைச்சர் உரிய உத்தரவிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா,
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற இழிவு செயல்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி,
குடிதண்ணீர் குடித்த குழந்தைகளும், மக்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த நிலை குறித்து முதலமைச்சர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின ஆணையமும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பாராட்டி உள்ளது. எந்தப் பகுதியிலும் இது போன்ற செயல்கள் நடைபெறக்கூடாது. குடிதண்ணீரில் மலம் கலந்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை,
ஆறாம் நூற்றாண்டிலும், ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்றது போன்ற சம்பவம் 21 ஆம் நூற்றாண்டில் தற்போது நடைபெற்றுள்ளது.
சில விஷமிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். வட மாநிலங்களில் சங்பரிவார் அமைப்புகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை போல இங்கு நடைபெற்றுள்ளது.
குடிதண்ணீரில் மலம் கலந்தது குறித்த தகவல் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு ஆலய வழிபாடு பிரச்சனை வந்தவுடன் அதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து அவர்களின் உரிமையை மீட்டுத் தந்துள்ளது.
எப்பொழுதெல்லாம் நல்லாட்சி அமைகின்றதோ, அப்பொழுதெல்லாம் சில விஷமத்தனமான செயல்களை சில அமைப்புகள் செய்கின்றன.
மலம் கலந்த நீர் தொட்டியை அகற்றி புதிய நீர் தொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ளது. எந்த அமைப்பு அங்கு உள்ளவர்களை இது போன்ற செயல்களில் ஈடுபட வைத்தது என்பது குறித்து எல்லாம் மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் தகவல் கொடுத்துள்ளோம்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் அந்த பகுதிகளுக்கு சில சமூக அமைப்புகள், சமூக நீதியை நிலைநாட்டுவதாக கூறிக்கொண்டு அங்கே வருகின்றனர்.
அதன் பின்பு அவர்கள் அதை கண்டு கொள்வதில்லை. பதட்டமான சூழ்நிலையை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,
இச்சம்பவம் தொடர்பாக அரசு இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. குற்றவாளிகளை உடனே கைது செய்யப்பட வேண்டும்.
முதலமைச்சர் ஸ்டாலின் பதில்,
இந்த நிகழ்வு கண்டனத்துக்கு உரியது. கண்டிக்க தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டு குழந்தைகள் உடல்நலம் பாதித்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் பயன்படுத்திய குடிநீர் பரிசோதிக்கப்பட்டது. மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்தது.
தற்போது கிராமத்தில் பொது சுகாதாரப்பணிகள் நடைபெற்று வருகிறது.நீர்த்தேக்க தொட்டி, குடிநீர்க்குழாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் செலவில் புதிய குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டு, சீராக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. லாரிமூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு, 70 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. பொருளாதாரம் அறிவியல் முன்னேற்றத்தில் இதுபோன்ற சம்பவம் தடைக்கல்லாக அமைகிறது.
சமூக விரோதிகள் இன்னும் நாட்டில் இருக்கிறார்கள். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கலை.ரா
ஈரோடு கிழக்கு தொகுதி: சட்டப்பேரவை செயலகம் முக்கிய அறிவிப்பு!