ஆளுநர் ரவி அரசியல்வாதி போல் செயல்படுகிறார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காந்தி மண்டப வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சில மது பாட்டில்களையும் பார்த்தேன், இது எனக்கு மிகவும் கவலையை தருகிறது” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,
“ஆளுநர் ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கமலாலயம் போல ராஜ்பவன் உள்ளது. ஆளுநர் மாநில அரசுடன் நல்ல உறவை உருவாக்க கூடிய ஒருவராக இருக்க வேண்டும். ஆனால் ஆளுநரின் நடவடிக்கை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இருக்கும் உறவை எந்தெந்த வகையில் துண்டிக்கலாமோ, அப்படி துண்டிக்கின்ற வகையில் அமைந்திருக்கிறது.
ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர் போல, நீட் தேர்வுக்கு பிஆர்ஓ போல இருந்தால் எப்படி நடவடிக்கைகள் இருக்குமோ அந்த நடவடிக்கைகளை தான் ஆளுநர் மேற்கொண்டு இருக்கிறார்.
காந்தி மண்டப வளாகத்தில், மது பாட்டில்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக சொல்கிறார். ஆளுநருக்கும் அவருடன் கேமரா மேனுக்கும் மட்டும் அந்த மது பாட்டில் தெரிந்திருக்கிறது. அங்கு ஏதோ ஒரு பாட்டில் இருந்துள்ளது. அதை ஆளுநர் மது பாட்டில் என்கிறார்.
இரவு நேரத்தில் சென்னையில் சுத்தம் செய்கின்ற பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.அதிகம் குப்பை சேரும் மெரினாவை கூட நாங்கள் சுத்தமாக வைத்துகொண்டிருக்கிறோம்.
சூதாட்டத்தையும் காந்தி தடுக்கத்தான் நினைத்தார் ஆளுநருக்கு தெரியும் . ஆனால் பல நூறு ஆட்டங்கள் இன்று நடந்து கொண்டு இருக்கிறது” என்றார்.
வேலும் அவர், “மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நிலை. மதுவிலக்கிற்கு ஆதரவான அரசுதான் திமுக அரசு. அதே நேரத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால், எல்லா மாநிலமும் சேர்ந்தால்தான் மதுவை ஒழிக்க முடியும். தமிழ்நாடு மட்டும் மதுவை ஒழிக்க முடியாது.
ஆனால் ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம், முன்னுரிமை கொடுக்கின்ற முதலமைச்சராக எங்களுடைய முதலமைச்சர் இருப்பார்.
தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட கிடையாது. ஆனால் பக்கத்து மாநிலங்கள் அனைத்திலும் மது இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக மதுவிலக்குக்கு ஒரு பாலிசி கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும்” என்று குறிப்பிட்டார் அமைச்சர் ரகுபதி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்”: விசிக மாநாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன்
மதுவிலக்கு விசாரணை ஆணையம், போதைப்பொருள் மறுவாழ்வு மையம்… விசிக மாநாட்டில் தீர்மானம்!