ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதற்காகத் தான் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ளார். governor intention in sending 10 bills
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அன்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் இன்று (டிசம்பர் 1) நடைபெற்ற கணினி அறிவியல் கருத்தரங்கை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
கணினி அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்புகள் மற்றும் சட்டம் மற்றும் சிறைத்துறையில் கணினி அறிவியலின் பங்களிப்புகள் குறித்து அமைச்சர் ரகுபதி உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “நாங்கள் 10 மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம்.
அதனை திருப்பி அனுப்புவதற்கு முன்பு இந்த காரணங்களுக்காகத்தான் திருப்பி அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டிருப்பாரேயானால் அதற்கான தகுந்த விளக்கங்களைத் தந்து மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியிருப்போம்.
ஆனால் அப்போது எதுவும் கேட்காமல் திருப்பி அனுப்பிவிட்டு, நாங்கள் மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய உடன் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக ஒரு செய்தியை சொல்லியுள்ளார்.
ஒப்புதல் தரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கின்ற நிலையில், ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காக தான் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
தன்னிடம் இருக்க கூடிய அதிகாரம் பறிபோக கூடாது என்ற எண்ணம் ஏன் அவர்களுக்கு வருகிறது என்று தெரியவில்லை. ஒரு மாநில அரசுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரமில்லை என்று நினைப்பது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒரு குழுவை நியமிக்கிறார். அந்த குழுவில் ஆளுநரின் பிரதிநிதியும் இருக்கிறார்.
அரசாங்கத்தின் பிரதிநிதி, சிண்டிகேட்டின் பிரதிநிதியும் இருக்கிறார்கள். அந்த தேடுதல் குழு பரிந்துரை செய்யும் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆளுநர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த மசோதாக்களை அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சட்டப்பேரவை செயலாளருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு விமர்சனம் எழுந்திருக்கிறது என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அது அரசின் முடிவு. விமர்சனங்களுக்கெல்லாம் எங்களால் பதில் அளிக்க முடியாது” என்று பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
காலை உணவு திட்டம்: சென்னை மாநகராட்சி விளக்கம்!
நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை!
governor intention in sending 10 bills