மோகன ரூபன்
இந்தியாவில் தற்போது சட்டமன்றத்தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஐந்து மாநிலங்களில் சத்தீஷ்கரும் ஒன்று. இந்தியாவின் மிகப்பழமையான பகுதி சத்தீஷ்கர். ஆமாங்க. இராமாயணம், மகாபாரதம் மாதிரியான இதிகாசங்களில் இடம்பெற்ற பகுதி இது.
தட்சண கோசல் அதாவது தெற்கு கோசலை என்பதுதான் சத்தீஷ்கர் பகுதியின் பழங்காலப் பெயர்.
தண்டகாரண்யம் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்களே. 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அந்த தண்டகாரண்ய (தண்டக+ஆரண்யம்) வனப் பகுதியின் பெரும்பகுதி சத்தீஷ்கரில்தான் உள்ளது. 7 மாவட்டங்களில் இந்த தண்டகாரண்யம் பரவிக் கிடக்கிறது.
‘இந்தியாவின் நயாகரா’ என்று அழைக்கப் படும் நாட்டின் மிகப்பெரிய அருவியான சித்திரகூட (சித்திரகோட்) அருவியும் கூட சத்தீஷ்கரில்தான் இருக்கிறது.
சோழன் ஆண்ட சத்தீஷ்கர்
சரி. சத்தீஷ்கருக்கு எப்படி சத்தீஷ்கர் என்ற பெயர் வந்தது? நல்ல கேள்வி.
இப்போது ஜார்க்கண்ட் என்று அழைக்கப்படும் பகுதியை புராண காலத்தில் ஜராசந்தன் என்பவர் ஆட்சி செய்திருக்கிறார். அந்த ஜராசந்தனின் ஆட்சி பிடிக்காமல், பழங்குடி இனத்தைச் சேர்ந்த 36 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தண்டகாரண்ய பகுதியில் போய் குடியேறி இருக்கிறார்கள். இந்தி மொழியில் சட்டீஷ் என்றால் 36 என்று அர்த்தம். இதனால்தான் சத்தீஷ்கர் மாநிலத்துக்கு சத்தீஷ்கர் என்ற பெயர் வந்தது என்பார்கள்.
‘அதெல்லாம் இல்லைங்க. சத்தீஷ்கரில் 36 கோட்டைகள் (கர்) இருந்திருக்கின்றன. 36 கோட்டைகள் இருந்ததால் சத்தீஷ்கர் என்ற பெயர் வந்தது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
சத்தீஷ்கர் பகுதியை ஒருகாலத்தில் காலசூரி பேரரசு ஆண்டது. காலசூரிகளை செடிஸ் என்றும் சொல்வார்கள். அந்த செடிஸ் என்பதில் இருந்து சத்தீஷ்கர் வந்திருக்கலாம் என்கிற கருத்தும் இருக்கிறது.
காலசூரிகள் மட்டுமில்ல. இந்திய அளவில் சத்தீஷ்கர் பகுதியை ஆளாதவர்களே இல்லை. மௌரியர்கள், குப்தர்கள், நாகர்கள், சாதவாகனர்கள், காகதீய வம்சத்தினர், ரஜபுத்திரர்கள், சாளுக்கியர்கள், மராத்தியர்கள், ஏன் நம்ம முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் கூட சத்தீஷ்கர் பகுதி ஒருகாலத்தில் இருந்திருக்கிறது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இந்தியாவின் நெல் கூடை!
அடர்ந்த காடுகள் கொண்ட மாநிலம் சத்தீஷ்கர். மாநிலத்தின் 44 சதவிகிதப் பகுதி காடுகள்தான். மகாநதி, கோதாவரி, இந்திராவதி, சோன் போன்ற பல ஆறுகள் இங்கே பாய்கின்றன. சித்திரகூட (சித்திரகோட்) நீர்வீழ்ச்சி, பஸ்தர் மாவட்டத்தின் ஜகதல்பூர் நகரத்துக்கு 50 கிலோ மீட்டர் அப்பால் உள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தின் நடுப்பகுதி நெல்விளையும் செழுமையான பகுதி. வடக்கும், தெற்கும் மலைப்பகுதிகள்.
சத்தீஷ்கரில் விளையும் நாக்ரி துப்ராஜ் வகை அரிசியை, ‘சத்தீஷ்கரின் பாசுமதி’ என்று சொல்வார்கள். புவிசார் குறியீடு பெற்ற மணமிக்க அரிசி இது. அதிக நெல் விளைவதால், இந்தியாவின் நெல்கூடை என்ற பெயரும் சத்தீஷ்கருக்கு உண்டு.
தனி மாநிலப் போராட்டம்!
சத்தீஷ்கர் ஒரு தனிமாநிலமாக வேண்டும் என்ற கோரிக்கை 1920களிலேயே எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. மத்திய பிரதேசத்துடன் ஒட்டிக்கிடந்த சத்தீஷ்கரை தனி மாநிலமாக்க கோரி, 1990களில், சத்தீஷ்கர் ராஜ்ய நிர்மாண் மஞ்ச் என்ற அமைப்பு போராடத் தொடங்கியது.
சந்துலால் சந்திரகர் என்ற பத்திரிகையாளருக்கு சத்தீஷ்கர் தனிமாநில போராட்டத்தில் முக்கியப்பங்கு உண்டு.
2000ஆம் ஆண்டு நவம்பர் முதல்தேதி, மத்திய பிரதேசத்தின் தென்கிழக்கில் இருந்த 16 மாவட்டங்களை ஒன்றிணைத்து சத்தீஷ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் 26ஆவது மாநிலமாக உருவான சத்தீஷ்கரில், இப்போது 27 மாவட்டங்கள் உள்ளன. இதில் தந்தேவாடா பெரிய மாவட்டம். பஸ்தர் முக்கியமான மாவட்டம்.
ஏழு மாநிலங்களுடன் சத்தீஷ்கருக்கு எல்லைகள் இருக்கின்றன. மாநிலத்தின் இரண்டரை கோடி மக்களில் பாதிப்பேர், பழங்குடிகள்.
42 வகையான பழங்குடி மக்கள் சத்தீஷ்கரில் வாழ்கிறார்கள். இவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் கோண்ட் பழங்குடிகள்.
தாது பூமி!
ஒரு காலத்தில் சத்தீஷ்கர் பகுதியின் தலைநகரமாக இருந்த இடம் ரத்தன்பூர். ஆங்கிலேயர்கள் அதை ராய்ப்பூருக்கு மாற்றினார்கள். இன்று சத்தீஷ்கர் மாநிலத்தின் தலைநகரமாக ராய்ப்பூர் திகழ்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய நகரம் இது.
ராய்ப்பூரில் 200 எஃகு ஆலைகள், நிலக்கரி, அலுமினியத் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவின் மொத்த எஃகு உற்பத்தியில் சத்தீஷ்கர் மாநிலத்தின் பங்கு 15 சதவிகிதம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.
நிலக்கரி, இரும்புத் தாது, பாக்சைட், சுண்ணாம்புக்கல் மாதிரியான கனிம வளங்களுக்குப் பேர் போன மாநிலம் சத்தீஷ்கர். இந்திய அளவில் 35.4 சதவிகித தகர இருப்பு சத்தீஷ்கரில் உள்ளது. இந்திய அளவில் 3ஆவது பெரிய அளவில் நிலக்கரி இருப்பு இருப்பதும் சத்தீஷ்கரில்தான்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
கலைகளின் கூடம் சத்தீஷ்கர்
சத்தீஷ்கரில் சிர்பூர் பகுதியில் உள்ள சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட லட்சுமணன் கோயில் புகழ் பெற்றது. கபிர்தம் பகுதியில் உள்ள போராம்தியோ என்ற சிவன் கோயில் வளாகத்துக்கு சத்தீஷ்கரின் கஜூராகோ என்ற பெயர் கூட உண்டு. ஜகதல்பூர் நகரத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடும் பழங்குடி மக்களின் சஞ்சய் சந்தை புகழ்பெற்றது.
ஆசியாவின் முதல் இசை பல்கலைக்கழகமான இந்திரா கலா சங்கீத் விஸ்வ வித்யாலயா இருப்பதும் சத்தீஷ்கரில்தான். கைராகர் பகுதியில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தின் புகழ்பெற்ற புள்ளிகள் யார் யார் என்று கேட்பீர்கள். வீர் நாராயண் சிங், தாகூர் பியாரிலால்சிங் ஆகியோர் சத்தீஷ்கர் பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள். பாலிவுட் இயக்குநரான அனுராக் பாசு, சத்தீஷ்கர்காரர்தான். கிரிக்கெட் லெக் ஸ்பின் பந்துவீச்சாளரான ராஜேஷ் சௌகான், ராஞ்சியில் பிறந்தவர். ஆனால் இப்போது அவர் வாழ்வது சத்தீஷ்கரின் பிலாய் பகுதியில்.
அரசியலும் ஆட்சியாளர்கள்
மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள். தற்போது சத்தீஷ்கர் மாநில முதல்வராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல்.
வரும் நவம்பர் 7, நவம்பர் 17 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாகத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது சத்தீஷ்கர் மாநிலம்.
அந்த மாநிலம் சந்திக்கப் போகும் ஆறாவது சட்டமன்றத் தேர்தல் இது. அதனால் மாநிலம் முழுக்க பரபரப்பு பந்தாடிக் கொண்டிருக்கிறது.
களத்தை வலம் வருவோம்
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன், மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!