சத்ரபதி சிவாஜி மன்னரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட மராத்தி திரைப்படமான ’ஹர் ஹர் மகாதேவ்’ திரையிடப்படுவதற்கு இடையூறு விளைவித்ததற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஜிதேந்திர அவாத் மற்றும் அவரது கட்சியினர் மீது நேற்று ( நவம்பர் 9 ) எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள ஒரு மாலில் நடிகர்கள் ஷரத் கேல்கர், சுபோத் பாவே, அம்ருதா கான்வில்கர் மற்றும் சைலி சஞ்சீவ் ஆகியோர் நடித்த ’ஹர் ஹர் மகாதேவ்’ படம் நேற்று ( நவம்பர் 8 ) திரையிடப்படவிருந்தது.
அப்போது அங்கு வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஜிதேந்திர அவாத் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் படத்தை திரையிடவிடாமல் தடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் பார்வையாளர்களை தியேட்டரை விட்டு வெளியேறச் சொல்லி கூச்சலிட்டுள்ளனர்.
வழக்குப் பதிவு
இந்நிலையில், அவர்கள் மீது தானே காவல்துறை பிரிவு 146 (கலவரம்), 321 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் 406 (நம்பிக்கையை மீறியதற்காக தண்டனை),
323 (தன்னிச்சையாக காயப்படுத்தியதற்காக தண்டனை) மற்றும் 504 (நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடுமையாக எதிர்க்கப்படும்
இதனிடையே, முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும், மராட்டிய மன்னர் சிவாஜியின் வழித்தோன்றலுமான சாம்பாஜிராஜே சத்ரபதி,
”கோலாப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த, சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை திரிபுபடுத்தும் படங்கள் கடுமையாக எதிர்க்கப்படும் என்றும், அதுபோன்ற படங்கள் வெளியாவதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

புனேவிலும் எதிர்ப்பு
முன்னதாக, ஷிவ் பிரதிஸ்தான் இந்துஸ்தான் அமைப்பின் நிறுவனர் சாம்பாஜி பிடேவின் ஆதரவாளர்கள் ’ஹர் ஹர் மகாதேவ்’ படத்தை புனேவில் திரையிடுவதற்கு இடையூறு செய்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்