குஜராத் மக்களுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை!

Published On:

| By Monisha

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (டிசம்பர் 5) நடைபெறவுள்ள நிலையில் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி 89 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் 63.14 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. குறிப்பாக 6 கிராமங்கள் முற்றிலும் வாக்குப்பதிவைப் புறக்கணித்திருந்தன.

தொடர்ந்து மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 833 வேட்பாளர்கள் போட்டியிடும் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (டிசம்பர் 5) நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் (டிசம்பர் 3) முடிவடைந்தது. இதற்காக பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நாளை நடைபெறவுள்ள தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும் என்று குஜராத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாருடன் இணைந்து துணை ராணுவ வீரர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்ததால் இரண்டாம் கட்ட தேர்தலில் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், “கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் இரண்டாம் கட்ட தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும்.

அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மோனிஷா

வாரிசு: ஸ்டாலின் சொல்லும் விளக்கம்!

வைரலாகும் அஜித்தின் துணிவு போஸ்டர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel