இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ec notice on two leaf issue
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்திருந்தார்.
அதில், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இதனால் இரட்டை இலை சின்னத்தை எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஒதுக்கக் கூடாது” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சூர்யமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “அதிமுக உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாகத் தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் நான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு வரும் மார்ச் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது.
அதில், கடந்த 12ஆம் தேதி சூர்யமூர்த்தி தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலை விவகாரம் குறித்து அனுப்பிய மனு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தங்களுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் சமயத்தில் அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா