கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ தெரிவித்தது.
இதில், 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன என்றும் மீதமுள்ள 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று(மார்ச் 14) வெளியிட்டுள்ளது.
இரண்டு பகுதியாக இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
முதல் பிடிஎப் ஃபைலில் 337 பக்கங்களில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு தொகை, எந்தெந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கியிருக்கிறது என்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இரண்டாவது பிடிஎப் ஃபைலில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு பெற்றிருக்கிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விவரப்படி, லாட்டரி நிறுவனமான பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் ரூ.1,368 கோடி மதிப்பிலான 1,368 பத்திரங்களை வாங்கியுள்ளது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு 7,000 கோடி வருவாய் ஈட்டும் கோயம்புத்தூரைச் சேர்ந்த நிறுவனமாகும். ‘லாட்டரி கிங்’ என அழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் பணமோசடி செய்ததாக 2023ஆம் ஆண்டு அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்நிறுவனம்தான் அதிகளவு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியிருப்பது தேர்தல் ஆணைய தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் வரிசையில் இரண்டாவதாக மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (எம்இஐஎல்) மற்றும் அந்த குழுமத்தைச் சேர்ந்த மேற்கு உ.பி. பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனம் சேர்ந்து 966 +220 என 1,186 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேகா குழுமம், தெலுங்கானாவில் ரூ. 1.15 லட்சம் கோடி மதிப்பிலான காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டம், மகாராஷ்டிராவில் ரூ. 14,400 கோடியில் தானே-போரிவலி இரட்டைச் சுரங்கப்பாதைத் திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்களை பெற்றுள்ளது.
அடுத்ததாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த க்விக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.410 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான தபஸ் மித்ரா, ரிலையன்ஸ் ஈரோஸ் புரொடக்ஷன்ஸ், ரிலையன்ஸ் போட்டோ பிலிம்ஸ், ரிலையன்ஸ் ஃபயர் பிரிகேட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பாலியஸ்டர் ஆகியவற்றின் இயக்குநராகவும் உள்ளார்.
அடுத்தடுத்த இடத்தில் ஹல்தியா எனர்ஜி 377 கோடி, வேதாந்தா நிறுவனம் 375.65 கோடி, எஸ்சல் மைனிங் அண்ட் இன்ட்ஸ் லிமிடெட் 224.5 கோடி, கெவென்டர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா லிமிடெட் 195 கோடி, மதன்லால் லிமிடெட். 185.5 கோடி,
பார்தி ஏர்டெல் லிமிடெட் 183 கோடி, யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 162 கோடி, உட்கல் அலுமினா இன்டர்நேஷனல் லிமிடெட் 135.3 கோடி, டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ் லிமிடெட் 130 கோடி, எம்கேஜே எண்டர்பிரைசஸ் லிமிடெட் 128.35 கோடி,
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் 123 கோடி, பி ஜி ஷிர்கே கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் 117 கோடி, தாரிவால் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் 115 கோடி, சென்னை கிரீன் வூட்ஸ் பிரைவேட் லிமிடெட் 105 கோடி, பிர்லாகார்பன் 105 கோடி, ருங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.
இந்த நிறுவனங்கள் முதல் 20 இடங்களில் உள்ளன.
கட்சிகளை பொறுத்தவரை,
பாஜக – 6,060.50 (47.46%) கோடி ரூபாய் பெற்று அதிக நிதி பெற்ற நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.
ஆல் இந்தியா திரிணமூல் காங்கிரஸ் – 1,609.50(12.60%) கோடி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி – 1,421.90(11.14%) கோடி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
பாரதிய ராஷ்டிரிய சமிதி – 1,214.70 (9.51) கோடி பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
திமுக – 639 கோடி, ஒயெஸ்.ஆர்.காங்கிரஸ் -337 கோடி, தெலுங்கு தேசம் கட்சி – 218 கோடி, சிவசேனா- 159 கோடி, ராஷ்டிரிய ஜனதா தளம் – 72 கோடி, ஆம் ஆத்மி – 65 கோடி, ஐக்கிய ஜனதா தளம் – 43 கோடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 13.50 கோடி, அதிமுக -6.10 கோடி ரூபாய் வாங்கியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்தியாவிலேயே தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்கள் யார் தெரியுமா?