எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து,கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு உறுதியேற்போம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா இன்று (ஜனவரி 17)அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். சசிகலா, சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விழுப்புரம் மாவட்டத்திலும் தனித்தனியாக மரியாதை செலுத்துகின்றனர்.
இந்தநிலையில், எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து, கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், வாழ்வு தந்த வள்ளல், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன்.
ஏழை எளியோர் பசிதீர்த்த வள்ளல், இடஒதுக்கீட்டை 49% இருந்து 68% ஏற்றிய சமூகநீதி காவலர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளில் அவர் புகழை போற்றி, தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து, கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்