ஜெயலலிதா சேலை சட்டமன்றத்தில் இழுக்கப்பட்டது பற்றி ஸ்டாலின் பொய்யான தகவலை தெரிவித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் போது பேசிய கனிமொழி எம்.பி, “மகாபாரதத்தில் திரெளபதி துகிலுரிக்கப்பட்டார். அவரை காப்பாற்ற கிருஷ்ணர் வந்தார். மணிப்பூரில் தங்களை காப்பாற்ற யாரும் வர மாட்டார்களா என்று அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்று பேசினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெண்களுக்கு எங்கு பிரச்சனை நடந்தாலும் நாங்கள் அதனை அரசியலாக்க விரும்பவில்லை. 1989-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை தமிழக சட்டசபையில் இழுக்கப்பட்டது. இதனை பார்த்து அங்கிருந்த திமுகவினர் சிரித்தனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் திரெளபதி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது”என்று தெரிவித்திருந்தார்.
நிர்மலா சீதாராமனுக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழக சட்டசபையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது ஜெயலலிதாவின் நாடகம் என்பது அங்கிருந்தவர்களுக்கு தெரியும்” என்று பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில் மதுரையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டு பணிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 13) ஆய்வு செய்தார்.
அப்போது ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டது நாடகம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,
“1989-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை கடுமையாக தாக்கினார்கள். திருநாவுக்கரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அதனை தடுத்தனர். தற்போதுள்ள திமுக மூத்த அமைச்சர் ஒருவர் ஜெயலலிதா சேலையை பிடித்து இழுக்க, சட்டமன்ற உறுப்பினர்கள் தலை முடியை பிடித்து இழுக்க கோரமான காட்சி அரங்கேறியது.
அன்றைய தினம் சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு தினம். சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. ஆனால் ஸ்டாலின் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி பேசுகிறார். ஜெயலலிதா சேலை சட்டமன்றத்தில் இழுக்கப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் தவறான பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு நடந்த பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.
மாநில பாஜக அதிமுகவுக்கு எதிராக உள்ளதா என்ற கேள்விக்கு, “நீங்களே பதில் சொல்லி விட்டீர்கள்” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சி கூட்டணி குறித்த கேள்விக்கு, “இந்தியா என்கிற பெயர் மக்களுக்கானது அதை வைத்து விட்டார்கள். பெங்களூரு மாநாட்டிற்கு ஆதரவு வேண்டுமென்றால் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தார். கண்டிஷன் போட்டு தான் கூட்டணியில் அமர்ந்தார். கெஜ்ரிவாலுக்கு அந்த திராணி உள்ளது. ஆனால் தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் கெஜ்ரிவாலை போல உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எங்களுக்கான பங்கை காவிரியில் திறந்து விட்டால் இந்த கூட்டத்தில் இடம் பெறுவேன் என்று முதல்வர் அறிவிப்பு கொடுத்திருந்தால் தண்ணி வந்து சேர்ந்திருக்கும். பெங்களூரில் நீர்வளத் துறை அமைச்சரை முதல்வர் சந்தித்தார் அப்போதாவது இது சம்பந்தமாக பேசி இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
“என்.எல்.சி மூன்றாம் சுரங்கம் அமைத்தால் கடலூர் முழு பாலைவனமாகும்” – அன்புமணி