2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது சொத்து விவரங்களை குறைத்து காட்டியதாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அசையும் சொத்து ரூ.3.14 கோடியும் அசையா சொத்து ரூ.4.66 கோடி இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.
2021-ஆம் சட்டமன்ற தேர்தலின் போது அசையும் சொத்து மதிப்பு ரூ.2.01 கோடியும் அசையா சொத்து ரூ.4.68 கோடி இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் எடப்பாடி பழனிசாமியின் தாய், மகன், மருமகன் சொத்துக்கள் அடங்கிய விவரங்கள் இருந்தது.
2021-ஆம் ஆண்டு தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமியின் மனைவி சொத்து மதிப்பு விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில் வேட்புமனு தாக்கலின் போது எடப்பாடி பழனிசாமி தனது சொத்து விவரங்களை ரூ.1 கோடி அளவிற்கு குறைத்து காட்டியதாக,
தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சட்டமன்ற தேர்தல் வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் 30 நாட்களுக்குள் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேலம் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
செல்வம்
“தரமான கேன் வாட்டர் விற்பனையாகிறதா?”:மா.சுப்பிரமணியன் உத்தரவு!