எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 2

Published On:

| By Balaji

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 2

இடம் சுட்டி பொருள் விளக்கும் எடப்பாடி!

ஆரா

’கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா… கீதையின் நாயகனே ‘ என்றொரு பாடலை நம்மில் அனேகம் பேர் கேட்டிருப்போம். சில பல வருடங்களுக்கு முன்பெல்லாம் அதிமுகவில் இந்தப் பாடலுக்கு பொருத்தமானவராகப் பேசப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

ஆம்…ஜெயலலிதா முதல்வர் பதவி வகிப்பதற்குச் சட்ட ரீதியான நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம், மாற்று ஏற்பாடாக, டேக் டைவர்ஷன் ஆக, ஓ.பன்னீர் அந்த முதலமைச்சர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டிருக்கிறார். ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தீர்ந்ததும் மீண்டும் முதல்வர் பதவியை கேட்பார். பன்னீர் அதைக் கொடுத்துவிட்டு மீண்டும் அமைச்சராகி ஜெயலலிதாவிடம் பணிவினைக் காண்பித்துக் கொண்டிருப்பார்.

ஜெயலலிதாவே இதை மேடையில் பேசி ஓ.பன்னீரைச் சிலாகித்திருக்கிறார். ‘விசுவாசத்துக்கு இன்னொரு பெயர் என்றால் அது அருமைச் சகோதரர் ஓ;பன்னீர்தான்’என்று உச்சரித்திருக்கிறார் ஜெயலலிதா. இதனால்தான், ‘கேட்டதும் கொடுப்பவரே பன்னீர்… பன்னீர்… ‘ என்று அதிமுகவில் அந்நாட்களில் பாடப்பட்டார் பன்னீர்.

இங்கேதான் பன்னீருக்கும், பழனிசாமிக்குமான வித்தியாசக் கோடு ஆரம்பிக்கிறது. கேட்டதும் கொடுப்பவராக இருந்த பன்னீர், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதே முதல்வர் பதவி தனக்குத் தரப்பட்டு மீண்டும், அதை சசிகலா கேட்டதும் அரைமனதோடு ராஜினாமா செய்துகொடுத்துவிட்டு தியான வெடியைப் பற்ற வைத்தார்.

இதன் மூலம் முதல்வர் ஆன எடப்பாடி பழனிசாமி, பின்னர் தன்னிடம் இருந்து முதல்வர் பதவி கேட்கப்பட்டபோது பன்னீர் போலக் கொடுத்துவிடாமல் ,தெரிவித்த மறுப்புதான் இன்று வரையிலான அதிமுகவின் சர்ச்சைகளுக்குக் காரணம். ஆக கேட்டதும் கொடுப்பவர் பன்னீர்தான், பழனிசாமி அல்ல.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் தனது முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி மிக லாகவமாகக் காப்பாற்றி வருகிறார். கயிற்றின் மேல் நடக்கும் கழைக் கூத்தாடிச் சிறுமியைப் போல, பருந்துகளிடம் இருந்து தனது குஞ்சுகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் கோழித் தாய் போல பல்வேறு திசைகளில் இருந்து வரும் அஸ்திரங்களையும் ஒன்றுமில்லாமல் செய்யும் போராட்டங்களை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

எதிரியாக இருந்து பின் இணைந்து துணை முதல்வர் ஆன ஓ.பன்னீரில் ஆரம்பித்து, இரட்டை இலைக்கு எதிராக குக்கர் விசிடிலடித்துக் கொண்டிருக்கும் தினகரன், மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமியின் எதிரிகள் எல்லாம் சாமானியமானவர்கள் அல்லர். மேலும் இப்போது நண்பரா, எதிரியா என்றே யூகிக்க முடியாத அளவுக்கு மத்திய பாஜக அரசு தரும் அழுத்தங்களுக்கு எல்லாம் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர்.

ஆகஸ்டு 21 ஆம் தேதி பன்னீர் அணி இணைந்தபோது, ‘அன்பு அண்ணன் பன்னீர்’ என்று வாய் நிறைய அழைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் மாளிகையில் அன்று மாலையே துணை முதலமைச்சர் பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்.

‘ஓ.பன்னீர்செல்வம் என்னும் நான் தமிழ்நாட்டின் அமைச்சர் என்ற முறையில் என் கவனத்துக்கும் உள்ளாவதுமான தெரியவருவதுமான எந்தப் பொருளும் துணை முதலமைச்சரின் கடமைகளை நிறைவேற்ற தேவையான அளவுக்கான..’ என்று அந்த பதவிப் பிரமாண வார்த்தைகள் போகும். உற்றுப் பார்த்தால் தெரியும்… ஓ.பன்னீர் என்பவர் அமைச்சருக்கான பதவிப் பிரமாணம் தான் ஏற்றிருக்கிறார். துணை முதலமைச்சர் என்பது சட்ட ரீதியான ஏற்பாடு அல்ல.

அவ்வாறு துணை முதல்வர் பதவி ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தலைமைச் செயலகத்தில்…முதல் மாடியில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறையின் பக்கத்து அறையில் அதிகார பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். அப்போதே பிரதமர் மோடியிடம் இருந்து, பன்னீருக்கு அதிகார பூர்வ வாழ்த்துகள் வந்துவிட்டது. பதவியேற்ற பதினைந்து நிமிடங்களுக்குள் மோடி பன்னீரை வாழ்த்தினார். இது பன்னீருக்கான வாழ்த்து மட்டுமல்ல. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கான டெல்லியின் ஓர் சமிக்ஞையும் கூட!

பன்னீர் மூலம் தனக்கு ஒரு செக் வைக்கப்படுகிறது என்பதை உணர்ந்தார் எடப்பாடி.. அவர்தான் கில்லாடி ஆயிற்றே… பன்னீருக்கே செக் வைத்தால்?

முதல் செக் சட்டமன்றத்திலேயே ஆரம்பித்தது.

Edappadi Leaks Mini Series 2

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது அந்தக் காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். முதல்வருக்கான நீண்ட சோபாவில் ஜெயலலிதா மட்டுமே அமர்ந்திருப்பார். அதற்கு அடுத்து இருக்கும் ஒரு சோபாவில் அடுத்தடுத்த நிலையில் இருக்கும் அமைச்சர்கள் அமர்ந்திருப்பார்கள்.

ஜெயலலிதா ஆளுமை மிக்க தலைவர், தவிரவும் அவர் ஒரு பெண் என்பதால் இயல்பாகவே அந்த சோபா அவருக்கே மட்டுமானதாக அறியப்பட்டிருந்தது. மேலும் முதல்வர் என்பதற்கான அந்தக் கெத்தை காட்டுவதுபோல நீண்ட அந்த சோபாவில் ஜெயலலிதா மட்டுமே அமர்ந்திருப்பார். அவரிடம் இருந்து கொஞ்ச தூரத்தில்தான் நம்பர் டூ அமைச்சர்களில் ஆரம்பித்து மற்றவர்கள் அமர்ந்திருப்பார்கள்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனபிறகு சட்டமன்றத்தில் அவருக்கான இருக்கை ஒதுக்குவதற்கான ஆலோசனை முதல்வருக்கும், சபாநாயகர் தனபாலுக்கும் இடையே நடந்திருக்கிறது.

அப்போது சபாநாயகர் தரப்பில் முதல்வர் எடப்பாடியிடம் ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

‘முதல்வருடைய சோபா நீளமாக இருக்கிறது. அதன் பக்கத்தில் இருக்கும் சோபாவில் ஆறு அமைச்சர்கள் நெருக்கடியாக அமர்ந்திருக்கிறார்கள். இப்போது பன்னீர் துணை முதல்வரான நிலையில்… அவருக்கு உங்களது சோபாவிலேயே ஒரு இடம் ஒதுக்கித் தாருங்கள். இல்லையென்றால் பக்கது சோபாவில் பன்னீரையும் சேர்த்து ஏழு அமைச்சர்கள் உட்கார வேண்டியிருக்கும்’ என்பதுதான் சபாநாயகரின் அந்த வேண்டுகோள்.

அரசியலில் தோற்றம் என்பதும் தன்னை இருப்பு வைத்துக் கொள்வதற்கான பிம்பங்களைக் கட்டமைத்துக் கொள்வதும் அடிப்படையான அரிச்சுவடிகளில் ஒன்று. ஜெயலலிதாவிடம் எதைக் கற்றாரோ இல்லையோ இதை நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது சபாநாயகருக்கு முதல்வர் அளித்த பதிலாக கோட்டை வட்டாரத்தில் சொல்லப்படுவது என்ன தெரியுமா?

‘முதலமைச்சர் சோபான்னா அது முதலமைச்சருக்கு மட்டும்தான். அம்மா இருக்கும்போது அப்படிதான் இருந்தது. பன்னீர் முதலமைச்சராக இருக்கும்போது கூட அப்படித்தான் இருந்தது. அதனால இப்ப துணை முதல்வர்னு சொல்லி அதை மாற்ற முடியாது. முதலமைச்சர் சீட்டில் முதலமைச்சருக்கு மட்டும்தான் இடம். தவிர துணை முதல் அமைச்சர்னு ஒரு பதவி கிடையாது. அது ஒரு அந்தஸ்துதான்/ அவர் அமைச்சர் என்றுதான் பதவியேற்றிருக்கிறார். அதனால் அவர் அமைச்சர்களோடு உட்கார்வதுதான் சரியாக இருக்கும்’!என்பதுதான் அந்தப் பதில்.

சட்டமன்றத்தில் அந்தக் காட்சியை அண்மை சட்டமன்றத்தில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சோபாவில் வசதியாக அமர்ந்திருக்க…. அதன் பக்கத்து சோபாவில், ‘துணை முதல்வர் பன்னீர், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் என்று ஏழு அமைச்சர்கள் ஒரே சோபாவில் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்திருக்கலாம்.

இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் அரசியல் உலகில்… முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடைய முதல் இடம் சுட்டிப்பொருள் விளக்கம் இதுதான்.

ஓ.பன்னீர்செல்வத்தை நிர்வாக ரீதியாக எப்படி வைத்திருக்கிறார் எடப்பாடி?

(லீக் ஆகும்)

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 1

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel