விக்கிரவாண்டிக்கு வர வேண்டாம்! ஸ்டாலினை தடுத்த அமைச்சர்கள்… ஏன்?

Published On:

| By christopher

Do not come to Vikravandi! Ministers blocked MKStalin... Why?

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் எட்டாம் தேதியோடு தொகுதியில் பிரச்சாரம் ஓய்வடைய இருக்கிறது.

இதனால் ஆளுங்கட்சியான திமுக தரப்பில் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேபோல பாமக தரப்பில் டாக்டர் ராமதாஸ் கிராமம் கிராமமாக சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி பாயிண்ட் பாயிண்டாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். தர்மபுரியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட சௌமியா அன்புமணியும் அவரது மகள்களும் கூட விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் புதுச்சேரியில் தங்கியபடி தினமும் விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டதால்… அதிமுகவினரின் வாக்குகளை யார் அள்ளுவது என்பதில் தற்போது கடுமையான போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெற்றி பெற்று உங்களை வந்து சந்திக்கிறோம்!

இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “சில நாட்களாகவே முதலமைச்சர் ஸ்டாலின் விக்கிரவாண்டியில் தேர்தல் பணியாற்றி வரும் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களுக்கு அலைபேசி செய்து அங்கிருக்கும் நிலவரம் பற்றி விசாரித்து வருகிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் என்ன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் என்ன என்ற டேட்டாவோடு முதலமைச்சர் இடைத்தேர்தலில் எத்தனை வாக்குகள் வரும் என்று விசாரித்து வருகிறார்.

அப்போது பொன்முடி ஜெகத்ரட்சகன் மற்றும் அமைச்சர்கள் முதலமைச்சரிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
‘அண்ணே உடல் நலனை பாத்துக்கங்க. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக களத்திலேயே இல்ல. பாமக தான் போட்டியிடறாங்க. இந்த நிலையில நீங்க வந்து பிரச்சாரம் செய்யணும் அப்படின்ற அவசியமும் இல்லை.

நாங்களே வெற்றி பெற்று உங்களை வந்து சந்திக்கிறோம். உதயாவை மட்டும் அனுப்பி வைங்க’ என்ற ரீதியில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜூலை 6, 7, 8 தேதிகளில் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் இண்டு இடுக்கு என்று ஒரு இடம் விடாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

எதிர்க்கட்சி அதிமுக போட்டியிடாத நிலையில் முதலமைச்சர் வந்து தான் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நிலைமை இல்லை. எனவே முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் திட்டம் எதுவும் இப்போது வரை இல்லை” என்கிறார்கள்‌.

ஆரா

2025 சாம்பியன்ஸ் ட்ரோபி : இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?

தமிழகத்தில் அதிகரிக்கும் வெயில்: காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share