திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி டி.ஆர். பாலு இன்று (ஏப்ரல் 20 ) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெயரும் இடம் பெற்றிருந்தது
இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியிருந்தார். இதேபோல் அண்ணாமலைக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உதயநிதியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அனுப்பியுள்ள நோட்டீஸில், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 50 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ”பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் விவகாரம் குறித்து, தி.மு.க. ஏற்கனவே அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நிச்சயமாக நானும் வழக்கு தொடருவேன். அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்” என்று கனிமொழி எம்.பி கூறினார்.
இந்நிலையில், ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சமூக பிரச்சனைகளை பேசும் தமிழ் சினிமா: நடிகர் கார்த்தி
நீதிமன்றம் படி ஏறி ஏறி கால்கள் அசந்துவிட்டன : பண்ருட்டி ராமச்சந்திரன்
மொழியை தாண்டி பலரை ஈர்த்த ’அயோத்தி’: சமுத்திரகனி
“சகோதரத்துவம் மட்டுமே நம்மை இணைக்கிறது”: இஃப்தார் நிகழ்ச்சியில் அண்ணாமலை