போதைப்பொருள் விவகாரம்… எடப்பாடி மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்த திமுக!

Published On:

| By Kavi

dmk filed case against edappadi palaniswami

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்துள்ளது.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அவரை திமுவில் இருந்து கட்சித் தலைமை நீக்கியது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  ‘ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளது. தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கு காரணமாக உள்ளது. போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது’ என்று திமுகவை குற்றம்சாட்டியிருந்தார்.

தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள கணக்குகளின் பெயருக்கு அருகில், “Say No To Drugs & DMK” என்ற வாசகத்தை இணைத்தார்.

கடந்த மார்ச் 12ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மனித சங்கி போராட்டம் நடத்தியது அதிமுக. சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடந்த போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

அப்போது ஜாபர் சாதிக் பற்றி பேசிய அவர்,  “போதை பொருள் கடத்தல் மூலமாக பெற்ற பணத்தை ஜாபர் சாதிக் திமுக நிர்வாகிகளுக்கு வழங்கியதாகவும், இன்னும் சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்கியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஜாபர் சாதிக் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் நிதி வழங்குவது போன்ற புகைப்படங்களும் வெளியாகியிருக்கிறது.

முதலமைச்சர் குடும்ப உறுப்பினர், இவரது பட தயாரிப்பில் இயக்குநராக இருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.

எனவே இதையெல்லாம் மத்திய அரசு முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். இனி திமுகவை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக  வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை என்.சி.பி கைது செய்திருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்து, அதன்மூலம் பணம் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் பதில் சொல்லியாக  வேண்டும். அமைச்சர் ரகுபதி பதற்றத்தின் வெளிப்பாடாக பேசுவது தெரிகிறது.

ஜாபர் சாதிக் முகத்தில் முகமூடி போட்டவாறு காட்டியது என்.சி.பி. அதுபோன்று தமிழ்நாட்டில் இருந்து மூகமூடி போட்டு, முகத்தை மறைத்து அழைக்கிற காட்சிகள் எல்லாம் இனி வரும்.

இன்று எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கை ஸ்டாலின் தொடர்ந்துள்ளார். அதை நாங்கள் எதிர்கொள்ள தயார். உண்மை என்னவென்று நாட்டுமக்களுக்குத் தெரியும்” என கூறினார்.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு… உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!

Jyothika: ரூபாய் 100 கோடியை வசூல் செய்தது ‘சைத்தான்’

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share