2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி ஆர்.என்.ரவி தமிழகத்தின் 26-ஆவது ஆளுநராக பதவியேற்றார்.
அவர் பதவியேற்றது முதல் சனாதனம், திராவிடம், காரல் மார்க்ஸ், அம்பேத்கர், திருவள்ளுவர், ஜி.யு.போப், ஆன்மிகம் குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார். அவரது கருத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
ஆனால் ஆளுநர் ஆர்.என் .ரவி தனது கருத்துக்களை மேடை தோறும் தொடர்ந்து முழங்கி வருகிறார்.
ஆளுநரின் அதிகாரம்!
அந்தவகையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று குடிமைப் பணிக்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது ஆளுநருக்கான அதிகாரம் குறித்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் அவர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசும்போது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்துள்ளது. துரதிருஷ்டவசமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது கவலைக்குரிய விஷயம்.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசியலமைப்பின் 200வது விதியின்படி ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். 2வது, மசோதா சரியில்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். அது கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம். இதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம், திராவிடம், அம்பேத்கர், ஜி.யு.போப் குறித்து தொடர்ச்சியாக பேசியதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திருவள்ளுவரை அவமதித்த ஜி.யு.போப்
2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடைபெற்ற ’தமிழ் கல்வி கழகம்’ நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் நன்னெறிகளை போதிக்கின்றன. ஆனால் திருக்குறள் எல்லாவற்றையும் விட தர்ம வேதத்தை உள்ளடக்கியதாக உள்ளது. அதன் முதல் குறளே ஆதி பகவன் பற்றிய குறள் தான். ரிக் வேதத்திலும் ஆதி பகவன் என்றே துவங்குகிறது. அந்த ஆதி பகவன் தான் இந்த உலகத்தை படைத்தார். திருவள்ளுவர் ஒரு ஆன்மிகவாதி,

ஜி.யு.போப் தனது மொழிபெயர்ப்பில் ஆதி பகவன் என்பதை முதன்மை கடவுள் என்று மொழிப்பெயர்த்து திருக்குறளை அவமதித்துள்ளார். அவர் ஒரு மத போதகர். இந்தியாவிற்கு ஊழியம் செய்வதற்காகவே ஜி.யு.போப் வந்தார். அவரது திருக்குறள் மொழி பெயர்ப்பானது ஆன்மா இல்லாத சடலம் போன்றது” என்றார்.
என்ஐஏ விசாரணைக்கு தாமதம் ஏன்?
2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை நவக்கரை ஜெ.எஸ்.எஸ் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “கோவை மாவட்டத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. தீவிரவாத கண்காணிப்பை தடுக்க நாம் தவறி விட்டோம். சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களுக்கு பிறகு தான் தேசிய முகமை விசாரணைக்கு கொடுத்துள்ளோம். இதனால் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.
திராவிடம் என்பது இனம் இல்லை!
2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பழங்குடியினர் பெருமை தின விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது, “திராவிடம் என்பதை ஒரு இனம் என ஆங்கிலேயர் தவறாக குறிப்பிட்டுள்ளனர். விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறாக உள்ளது.
வடபகுதியிலிருப்பவர்கள் தெற்கே வருவதும், தெற்கு பகுதியிலிருப்பவர்கள் வட பகுதிக்கு செல்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பிறகும் திராவிட இனம் என்பதை நாம் பின்பற்றி வருவது தவறாகும்” என்றார்.
தமிழகத்தில் இருந்து துவங்கிய சனாதன தர்மம்!
2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூர் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் 176-வது ஆராதனை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, “இந்திய நாடு வலிமையான ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது தான் இந்தியா. சனாதன தர்மத்தால் மட்டுமே ஒரே நாடு சாத்தியமாகும். சனாதன தர்மம் தமிழகத்தில் இருந்து தான் துவங்கியது” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அல்ல தமிழகம்!
2023-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டத்தை அமல்படுத்தினால் அதனை தமிழகத்தில் வேண்டாம் என்று சொல்கிறார்கள். பாரதத்தின் ஒரு பகுதி தான் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று கூறுவதே சரியாக இருக்கும்” என்றார்.
சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு!
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கியது. இதில் அரசு தயாரித்து கொடுத்த உரையில், திராவிட மாடல், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், பெரியார், சமூக நீதி, மத நல்லிணக்கம், ஆகிய வார்த்தைகளை தவிர்த்து பேசியிருந்தார்.

இதனால் ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காததால் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர். ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பொங்கல் அழைப்பிதழில் இந்திய அரசு இலட்சினை!
ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு இலச்சினை இருந்த இடத்தில் இந்திய அரசு இலச்சினை இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மார்க்சியம் பிரிவினையை உண்டாக்குகிறது!
2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி பேராசிரியர் தர்மலிங்கம் எழுதிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா: சிந்தனை சிதறல்கள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் ரவி, “வலியது வாழும் என்ற டார்வின் உருவாக்கிய கோட்பாட்டால் பலவீனமானவர்கள் வாழ்வதற்கு உரிமை இல்லாமலும் இரக்கத்திற்கு இடமில்லாமலும் போகிறது.
மார்க்சியம் சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவினருக்கிடையே பாகுபாட்டை தோற்றுவிப்பதோடு சமுதாயத்தில் நிரந்தர பிரிவினையை ஏற்படுத்துகிறது
மேற்கத்திய சித்தாந்தங்களான இறையியல், டார்வீனிய கோட்பாடு, மார்க்சிய கோட்பாடு, ரூசோ சமூக ஒப்பந்த கோட்பாடு நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது” என்றார்.
அம்பேத்கர் ஒரு தேசியவாதி!
2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியும் அம்பேத்கரும் நூல் வெளியீட்டு விழாவில் பேசியபோது, “சமூக நீதி குறித்து பல கட்சிகளும் பேசி வந்தாலும் இன்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது, கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்காதது என தொடர்ந்து அவர்களை அவமரியாதை செய்து வருகின்றனர். அம்பேத்கர் ஒரு தேசியவாதி. ஆங்கிலேயர்கள் நாட்டை பிரித்தாள முயன்றபோது அதனை தடுத்தவர் அம்பேத்கர்” என்று தெரிவித்தார்.
நிலுவையில் சட்ட மசோதாக்கள்!
தமிழக அரசால் இயற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட திருத்த மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 14 கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்,என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக ஆன்லைன் தடை சட்ட மசோதா சட்டமன்றத்தில் அனைத்து கட்சி ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தமிழக அரசுக்கு இந்த சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் மசோதாவை திருப்பி அனுப்பினார். இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இப்படி தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆளும் திமுக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் தமிழக அரசிற்கு தொடர்ந்து தலைவலியாகவே இருந்து வருகிறது.
செல்வம்
பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சூடுபிடிக்கும் பல்வீர் சிங் விவகாரம்: விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்!