வைஃபை ஆன் செய்ததும் அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் இன்று செப்டம்பர் 29ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. அமைச்சராக இருந்த உதயநிதி இன்று முதல் துணை முதலமைச்சர் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். 471 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு, ஏற்கனவே அவர் வகித்து வந்த மதுவிலக்கு ஆயத் தீர்வை மற்றும் மின்சாரத்துறை வழங்கப்பட்டிருக்கின்றன.
சீனியர் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பொன்முடியைத் தவிர வேறு எந்த சீனியர் அமைச்சர் மீதும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் பெரிய அளவு நடவடிக்கை இல்லை.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய மூத்த அமைச்சர் பொன்முடி கலைஞர் காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்க திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர். அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு அவருக்கு வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு விதிக்கப்பட்ட ‘டி ப்ரமோஷனாக’ அதாவது தண்டனையாகவே திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய சீனியர்களின் இலாகாக்கள் பறிக்கப்படும் அல்லது பரிமாற்றப்படும். அவர்களின் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்றெல்லாம் அமைச்சரவை மாற்றம் பற்றிய விவாதங்களின் போது திமுக உயர் மட்ட வட்டாரத்திலேயே எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த பவள விழா கூட்டத்தில் கூட அமைச்சர்களே பலரும் யாருக்கு பதவி பறிபோகிறது என சஸ்பென்ஸோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் தான் சீனியர்களில் பொன்முடிக்கு மட்டும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது… ’கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய, ’கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவில் சீனியர்களை ஸ்டாலின் எவ்வாறு கையாண்டு வருகிறார் என்று துரைமுருகனை உதாரணம் காட்டி நடிகர் ரஜினிகாந்த் பட்டவர்த்தனமாக ஸ்டாலினைப் பாராட்டினார்.
ரஜினிகாந்தின் பேச்சு திமுகவில் கிட்டத்தட்ட அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து உதயநிதி அளித்த பேட்டியில் கூட சீனியர்கள் இளைஞர்களுக்கு வழி விடுத்து வழி நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ரஜினிகாந்தின் கருத்துக்கு திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் மிக கடுமையான வார்த்தைகளை வெளியிட்டு தனது அதிருப்தியை தெரிவித்தார். இதைப் பார்த்து அப்போதே முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கோபமடைந்தார். துரைமுருகனை எச்சரித்தார். அந்த சமயத்திலேயே சீனியர்களுக்கு கடிவாளம் இடவேண்டும் என முடிவெடுத்து விட்டார் ஸ்டாலின்.
இந்த அடிப்படையில் தான் துரைமுருகனிடம் இருக்கும் பலமான துறையான கனிமவளத்துறையை அவரிடமிருந்து பறித்து அவருக்கு கலைஞர் பாணியில் வெறும் சட்டத்துறையை மட்டுமே வழங்குவது என்றும் ஆலோசித்து முடிவெடுத்தார் ஸ்டாலின். இதே போல வேறு சில சீனியர்களின் பலமான துறைகளை மாற்றுவது என்றும் ஆலோசிக்கப்பட்டு கிட்டத்தட்ட பட்டியலும் ரெடியாகிவிட்டது.
இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். தனக்கே உரிய பாணியில் சுவாரசியமாக கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த துரைமுருகனிடம், ‘அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி…’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
உடனடியாக தனது அதிருப்தி ஆதங்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஏதோ சொல்லிவிட்டு விருட்டென இருக்கையில் இருந்து எழுந்து விட்டார் துரைமுருகன்.
ஏற்கனவே சீனியர் -ஜூனியர் சர்ச்சையில் பலமாக அடிபட்ட துரைமுருகன், துணை முதலமைச்சர் பற்றிய கேள்விக்கு காட்டிய ரீயாக்சனை முதலமைச்சரும் பார்த்திருக்கிறார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கும் அதே நேரம் சீனியர்களின் இலாக்காக்களை பறிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ செய்தால் சரியாக இருக்குமா என்று துரைமுருகனின் அந்த ரியாக்ஷனை பார்த்து தான் முதலமைச்சர் ஸ்டாலின் யோசிக்க தொடங்கினார்.
மூத்த முன்னோடிகள் திமுகவில் பலர் இருக்கும்போது வாரிசு என்ற ஒரே அடிப்படையில் மட்டுமே உதயநிதிக்கு இந்த பதவி வழங்கப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியையும் அளித்துவிட்டு, அதே நேரம் சீனியர்களின் செல்வாக்கையும் குறைத்தால் அது சரியாக இருக்காது என்று கருதி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த அடிப்படையில் தான் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி சீனியர்கள் மீதான ஆக்சன் வேண்டாம் என்ற முடிவெடுத்து இருக்கிறார். அதே நேரம் சீனியர்களிடம் பணிந்துவிட்டோம் என்ற தோற்றமும் உருவாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் ஒட்டுமொத்த சீனியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொன்முடிக்கான இலாகா மாற்றம் நடந்திருக்கிறது,
சில மாதங்களுக்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சமயத்திலேயே பொன்முடி மீது ஸ்டாலின் கடும் கோபத்தில் இருந்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் அன்னியூர் சிவா என முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருந்த நிலையில், பொன்முடியோ தனது தீவிர ஆதரவாளரான விழுப்புரம் மாவட்ட ஊராட்சி தலைவரான ஜெயச்சந்திரன் என்பவரை வேட்பாளர் ஆக்குவதற்கு கடுமையாக முயற்சி செய்தார்,
ஆனால், வேட்பாளர் அன்னியூர் சிவா என ஸ்டாலின் அறிவாலயத்தில் தெரிவித்த நிலையில், ‘வேணும்னா நேர்காணல் வச்சி தேர்வு செய்யலாமே’ என்று உடனடியாக பதில் சொல்லி இருக்கிறார் பொன்முடி. இதில் அப்போதே பொன்முடி மீது கடும் கோபமாகிவிட்டார் ஸ்டாலின்.
இது மட்டுமல்ல பொன்முடி வகித்து வரும் உயர்கல்வி துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளில் பலரும் பொன்முடி இணக்கமற்ற முறையில் சிடுசிடுவென நடந்து கொள்கிறார் என்று முதல்வருக்கு சென்று சேரும்படி அதிகாரிகள் வழியாகவே புகார்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இது மட்டுமல்ல உயர் கல்வித்துறைக்குள் பொன்முடி குடும்பத்தினரின் தலையீடும் அதிகமாக இருக்கிறது என்று உளவுத்துறை ரிப்போர்ட்டும் முதல்வருக்கு சென்றிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்துதான் பொன்முடி மீதான நடவடிக்கைக்கு வித்திட்டு இருக்கிறது.
சீனியர்கள் மீது ஆக்சன் வேண்டாம் என்று நினைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே நேரம் ஒட்டுமொத்த சீனியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் பொன்முடியின் துறை மீது கை வைத்திருக்கிறார் என்கிறார்கள் திமுக உயர்மட்ட வட்டாரங்களில்” என்ற மெசேஜ்க்கு சென்று கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பரிசாக கொடுங்கள்” – மோடி அட்வைஸ்!
சசிக்குமாரை அந்தளவுக்கு கொடுமைப்படுத்தினேன்- நந்தன் படம் குறித்து இரா. சரவணன் உருக்கமான பதிவு!