வைஃபை ஆன் செய்ததும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் சென்னை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. modi why send rajnath sing to tamilnadu
“சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 7ஆம் தேதி சென்னை வந்தார். ராணுவ ஹெலிகாப்டரில் அவரோடு மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பயணித்து வெள்ள சேதத்தை ராஜ்நாத் சிங்கிடம் விளக்கினார்கள்.
இதற்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங், ’மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியை வழங்கும்’ என்று உறுதி அளித்தார். மேலும் முதல் கட்டமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஏற்கனவே ரூ.450 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும்… இப்போது இரண்டாவது தவணையாக உடனடியாக ரூ.450 கோடி ரூபாயும், நகர்ப்புற புனரமைப்பு நிதியாக ரூ.500 கோடி விடுவிப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் சென்னை வந்து கொண்டிருக்கும்போதே, இன்று காலை டெல்லியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் ரூ.5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கோரிக்கையை வலியுறுத்தினார்.
தேசிய பேரிடர் மேலாண்மை என்பது உள்துறை அமைச்சர் அமித் ஷா வசம் இருக்கிறது. தமிழ்நாட்டு வெள்ள பாதிப்பு பற்றி ஆராய்வதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் வருவார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால் அவர் வர இயலவில்லை. அவருக்கு பதில் தமிழ்நாட்டை சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவார் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் இந்த இருவரும் இல்லாமல் திடீரென ராஜ்நாத் சிங்கை அழைத்து, ’நீங்கள் தமிழ்நாட்டுக்கு சென்று வாருங்கள்’ என்று அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் மோடி.
ராஜ்நாத் சிங் சமீப காலங்களாக தமிழ்நாடு அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை. ஆனால் 1999- 2004 வாஜ்பாய் ஆட்சியில் தமிழ்நாட்டோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார் ராஜ்நாத் சிங். அதுமட்டுமல்ல அவருக்கு திமுகவின் மூத்த தலைவர்கள் பலரோடு நல்ல நட்பும், இணக்கமும் உண்டு. இந்த நிலையில் திமுகவோடு மோதல் போக்கை கடைபிடிப்பதாக கருதப்பட்டு வரும் அமித்ஷாவையோ நிர்மலா சீதாராமனையோ அனுப்பாமல் திமுகவுக்கு இணக்கமான சீனியர் அமைச்சரான ராஜ்நாத் சிங்கை மோடி தமிழ்நாட்டுக்கு அனுப்பியது திமுகவினர் மத்தியிலேயே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால் சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளில் 14 அமைச்சர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு சென்னையில் லோக்கல் திமுக நிர்வாகிகளோ திமுக கவுன்சிலர்களோ 100% ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால்தான் வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் இருந்தும் தாங்கள் பொறுப்பு அமைச்சர்களாக இருக்கும் மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்களை வரவழைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தான், அமைச்சர் எ.வ. வேலு பொறுப்பு அமைச்சராக இருக்கும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் எம்எல்ஏவுமான வசந்தம் கார்த்திகேயன் வேலுவின் பொறுப்புக்கு உட்பட்ட வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் தீவிரமான நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்று வெளி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் சிலர் சென்னைக்குள் வந்து நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்.
இது மட்டுமல்ல உடனடியாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு வெளியே இருக்கும் அனைத்து திமுக எம்எல்ஏக்களையும் நிவாரணப் பொருட்களோடு சென்னைக்கு வந்து, அமைச்சர்களுக்கு நிவாரண பணிகளில் உதவுமாறு திமுக தலைமையில் இருந்து உத்தரவு சென்று இருக்கிறது. இதையடுத்து வெளிமாவட்டங்களில் இருக்கும் திமுக எம்எல்ஏக்கள் நிவாரண பொருட்களை திரட்டி சென்னைக்கு அனுப்பி வைக்க தொடங்கிவிட்டனர். நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த கையோடு அவர்களும் சென்னையை நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுகவின் சென்னை மாநகர கவுன்சிலர்கள் பலர் வெள்ள நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபடவில்லை என்ற தகவலும் ஸ்டாலினுக்கு சென்றிருக்கிறது.
ஏன் என்று விசாரித்த போது, ’கடந்த இரண்டரை வருட ஆட்சியில் நாங்கள் எதுவும் பெரிதாக சம்பாதிக்கவில்லை. அப்படி சம்பாதித்து இருந்தால் இந்நேரம் அதிரடியாக செலவு செய்திருப்போம். எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட கொரோனா காலகட்டங்களில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் தீவிரமாக செயல்பட முடிந்த திமுகவினரால், ஆளுங்கட்சியாக இருக்கும் போது செயல்பட முடியாத காரணத்தை திமுக தலைமை உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்றும் கவுன்சிலர்கள் வட்டாரத்திலிருந்து முணுமுணுப்பு எழுந்து கொண்டிருக்கிறது” என்கிற மெசேஜ் க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன்: இந்த வாரம் ரெட் கார்டா?
வெள்ள நிவாரண நிதி : தலைமை செயலாளர் முக்கிய தகவல்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
modi why send rajnath sing to tamilnadu