டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. – ஆம் ஆத்மி கட்சிகளின் கவுன்சிலர்கள் மோதிக் கொண்டதால் மறு தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த டிசம்பா் 4ஆம் தேதி டெல்லி மாநகராட்சித் தோ்தல் நடைபெற்றது.
250 உறுப்பினா்களைக் கொண்ட இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களையும், பா.ஜ.க. 104 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றின.
இதன்மூலம் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு ஆம் ஆத்மி முடிவு கட்டியது.
இந்நிலையில், மாநகராட்சித் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக இன்று மாமன்றக் கூட்டம் கூடியது. இதில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்ற பிறகு, மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, ‘ஆல்டா்மென்’ எனப்படும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 10 உறுப்பினா்களை நியமன உறுப்பினர்களாக டெல்லி துணை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரைத்தார்.
இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றாலும், டெல்லி அரசின் ஒப்புதலின்றி பரிந்துரைத்ததாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு எழுப்பியது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட கடிதத்தில், துணை ஆளுநர் வேண்டுமென்றே பாஜகவை சேர்ந்த 10 பேரை நியமன உறுப்பினராக பரிந்துரைத்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை டெல்லி மாமன்றக் கூட்டம் கூடியவுடன் நியமன உறுப்பினர்களின் பதவியேற்புக்கு ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் பின்னர் மேயர் மற்றும் துணை மேயர் பதவியேற்புக்கு தலைமை தாங்க தற்காலிக சபாநாயகராக பாஜக கவுன்சிலர் சத்யா சர்மா நியமிக்கப்பட்டார்.
மாமன்றத்தின் மூத்த உறுப்பினர் தான் சபாநாயகராக இருக்க வேண்டும் என்று கவுன்சிலர் முகேஷ் கோயலை இந்த பதவிக்கு ஆம் ஆத்மி கட்சி பரிந்துரைத்தது.
இதனை தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் பா.ஜ.க – ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.
இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் மன்றத்தில் இருந்த நாற்காலி, மேஜை ஆகியவற்றை தூக்கிப்போட்டு கூச்சலிட்டனர்.
இதனால் சில கவுன்சிலர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மறு தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தலும் நிறுத்தி வைக்கப்பட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.