ஆபாச வீடியோக்கள்: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு 6 நாள் போலீஸ் கஸ்டடி!

Published On:

| By indhu

Court orders 6-day police custody for Prajwal Revanna

பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று (மே 31) கைது செய்யப்பட்ட  எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இவருக்காக பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார்.

கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற்றபோது பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவில் புயலை கிளப்பியது.

வீட்டில் பணிபுரியும் பணிப்பெண், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கிடையில், ஏப்ரல் 26ஆம் தேதி இரவு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். தொடர்ந்து, இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

2 முறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகததால், ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், அவரது பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட பிரஜ்வல் இன்று (மே 31) நள்ளிரவு 12.39 மணிக்கு பெங்களூரு திரும்பினார்.

அங்கு விமான நிலைய தொழில் பாதுகாப்பு காவல்துறையினர் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரிக்கும் கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரிடம் பிரஜ்வல் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (மே 31) பிரஜ்வல் ரேவண்ணா ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர், பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் அதாவது ஜூலை 6 வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு  புலனாய்வு பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை வெளிநாட்டில் இருந்த ரேவண்ணா ஜூன் 1 ஆம் தேதி இறுதி கட்ட தேர்தலுக்கு முன், இந்தியா வந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை… சுருண்டு விழுந்த தாய் யானை; சுற்றிச் சுற்றி வரும் குட்டி யானை

இப்போது வெள்ளத்துரை… அடுத்து முருகன்? கடைசி நேர சஸ்பெண்ட் லிஸ்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share