கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இன்று (மே 2) அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டார்.
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
பாஜக தரப்பில் தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும்,
காங்கிரஸ் தரப்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
காங்கிரஸ் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உரிமைத்தொகை, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ரூ.1500 உதவித்தொகை, பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10 கிலோ இலவச அரிசி,
அனைத்து கிராம பஞ்சாயத்திலும் இலவச வை – பை வசதி, விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் ரூ.10 லட்சம் வரை விவசாய கடன், ஒரு வருடத்தில் அனைத்து அரசு காலிபணியிடங்களும் நிரப்பப்படும்,
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும், கர்நாடகா மாநில தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்