நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் ‘தீவிர தூய்மைப் பணி’ திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 17) துவக்கி வைத்தார்.
இதன் மூலம் நீர் நிலைகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் உள்ள பகுதிகள் மண்டல வாரியாக கண்டறியப்பட்டு 12 இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை எழும்பூரில் கால்வாய் ஓரம் உள்ள சாலையில் குவிந்துள்ள குப்பைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சேற்றில் இறங்கி அள்ளினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் டைடல் பார்க், OMR, ECR உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த இடங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. இந்த திட்டத்தை மேற்கொள்ள அனைத்து பணியாளர்களும் இன்று நேரடியாக களத்தில் இறங்கினோம். புதுப்பேட்டை கூவம் ஆற்றை ஒட்டியுள்ள நீர்நிலைகளில் கட்டிட கழிவுகள், பழைய கார்கள், தெர்மாகோல்கள் உள்ளிட்ட 150 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் , இப்பகுதியில் புதிய கழிப்பிடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். நேற்று மட்டும் கூவம் ஆற்றின் ஒரு பகுதியில் 51 லோடு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இன்று 50 லோடு இலக்கு வைத்துள்ளோம்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநர்: அரசு அதிரடி உத்தரவு!