மிக்ஜாம் புயலால் பெய்த கன மழை காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்,ஏ விடுதிகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னையில் பல பகுதிகளும் தண்ணீரில் தத்தளிக்கிறது.
வடிகால் வாய்க்கால்கள் சரியில்லாததால், இந்த மழை வெள்ளத்தில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்புகள், அமைச்சர்கள் குடியிருப்புகள், சேப்பாக்கத்தில் உள்ள முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் வசிக்கும் நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குளிக்க, பாத்ரூம் போக கூட தண்ணீர் இல்லாமல் தவித்துப் போனார்கள்.
சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் ஏ,பி,சி,டி என நான்கு பிளாக்குகளில் 240 அறைகள் உள்ளன. ஒவ்வொரு பிளாக்கும் பத்து மாடிகள் கொண்டது.
அதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது எதிர்கட்சி கொறடவாவுமாக உள்ள வேலுமணி டி பிளாக்கில் பத்தாவது மாடியில் இருக்கிறார்.
அவர் கடந்த 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ஆவது ஆண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார்.
அப்போது, எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கு வரலாமா? அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்று தனது ஆதரவாளர்களிடம் கேட்டுள்ளார்.
இதற்கு, “அண்ணா இங்கே வராதீங்க… அனைத்து பிளாக்கிலும் தண்ணீர் கசிகிறது. லிப்ட்டுகளும் வேலை செய்யவில்லை. தரைத் தளத்தில் லிப்ட்டுக்கு கீழே இருந்து தண்ணீர் சுரக்கிறது. அதனால் எந்த லிஃப்ட்டும் வேலை செய்யவில்லை” என்று அவரது ஆதரவாளர்கள் கூறியிருக்கின்றனர்.
இதை கேட்ட எஸ்.பி வேலுமணி, “என்னய்யா விடுதி.. வீணா போன விடுதி” என்று வேதனையோடு கூறியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
நாம் எம்.எல்.ஏ விடுதி நிலைமை குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தோம்,..
“சாதாரணமாக மழை பெய்தாலே சீலிங்கில் தண்ணீர் கசியும். இப்போது சொல்லவே வேண்டாம். பத்தாவது மாடியில் உள்ள அறைக்குள்ளே தண்ணீர் கசிந்து தேங்கியிருக்கிறது, இன்று டிசம்பர் 7 ஆம் தேதி மாலை வரையில் லிஃப்ட் வேலை செய்யவில்லை. சில பிளாக்கில் தண்ணீர் இல்லை. கட்டிடமே பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருகிறது” என்கிறார்கள் சில எம்.எல்.ஏ-க்கள்.
மக்கள் பிரதிநிதிகள் குடியிருப்புகளே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் குடியிருப்புகள் எந்த நிலையில் இருக்கும் என்கிறார்கள் சென்னை வாசிகள்.
எம்.எல்.ஏ விடுதிக்கு பேட்ச் வொர்க் தான் செய்யணும் போல…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி