பாஜகவின் மாநிலச் செயலாளர் வினோஜ் உள்ளிட்ட பாஜகவினர் இன்று (ஆகஸ்டு 18) சென்னையை அடுத்த வில்லிவாக்கத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
“இந்த நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ‘என் மண், என் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்படும்.
இதன்படி நாடு முழுவதும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களைப் போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
அந்த இயக்கத்தின் கீழ் ’அமுத கலச யாத்திரை’ நடத்தப்படும். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7,500 சிறிய அளவிலான கலசங்களில் மண் நிரப்பப்பட்டு,
இந்த ’அமுதக்கலச யாத்திரை’ டெல்லியை வந்தடையும். அந்த கலசங்கள் கூடவே மரக்கன்றுகளும், செடிகளும் எடுத்து வரப்படும்.
அந்த கலசங்களில் உள்ள மண் அனைத்தும் டெல்லி தேசிய போர் நினைவிடத்துக்கு அருகே ஒன்றாகக் கொட்டப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு அந்த இடத்தில் ’அமுதப்பூங்காவனம்’ அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
மேலும், “நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் இந்த முன்னெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும்.” என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ‘என் மண், என் தேசம் ’ என்ற மோடியின் அழைப்பின்படி பாஜக வில்லிவாக்கம் கிழக்கு தொகுதி தலைவர் ரவிக்குமார் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 18) கோவிலில் பாஜகவினர் தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் கலந்து கொள்ள வந்தார்.
அப்பொழுது ஒரு பிடி மண் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சிக்கு வினோஜ் செல்வதற்கு போலீசார் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து மாநில செயலாளர் வினோஜ் செல்வம், பாஜக வில்லிவாக்கம் கிழக்கு தொகுதி தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
“என் 30 வருட ஆதங்கம்” : மாமன்னன் பற்றி ஏ.ஆர்.ரகுமான்
நினைவு தினத்தில் நெல்லை கண்ணனுக்கு கிடைத்த பெருமை!
தனுஷ்கோடிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!