“கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசு விழா மேடையில் எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமியை, அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில்,
கோவை வேளாண் பல்கலையில், உழவர்கள் கூட்டம் இன்று (அக்டோபர் 14) நடைபெற்றது. இதில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் வேளாண் துறை உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
இந்த விழா மேடையில், எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி அமர்ந்துள்ளதற்கு விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ”கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்டிருக்கின்ற விழாவில்,
மேடையில் எந்த அரசுப் பொறுப்பிலும், இல்லாத கோவை மாவட்ட பிஜேபி தலைவர் உத்தம ராமசாமி அமர்ந்துள்ளார்.
இதை அரசு விதிகள், பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? அரசு விழாவில் ஒரு அரசியல் கட்சியின் விழாவாக மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.
தமிழக அரசு உடனடியாக இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு விழாவில் மேடையில் பிஜேபி தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
ஜெ.பிரகாஷ்